2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 15 July 2021 10:44 PM IST (Updated: 15 July 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ராமநாதபுரம், ஜூலை.16-
ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்றச்செயலில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
வழிப்பறி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி நீராவி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் என்பவரின் மகன் குருசாமி (வயது28). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்துவிட்டு கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி இரவு பஸ்சில் வந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். 
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அம்மன்பட்டி உடையப்பன் மகன் அஜித் விக்னேஸ்வரன் (வயது24), மரக்குளம் மாரிமுத்து மகன் மணிவண்ணன் (28) மற்றும் 2 பேர் சேர்ந்து வாள், கத்தியை காட்டி மிரட்டி குருசாமி வைத்து இருந்த  ரூ.7 ஆயிரத்து 500 மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதுதொடர்பாக கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்டவர்களை கைது செய்தனர். 
தகராறு
இதேபோல, பார்த்திபனூர் அருகே உள்ள சூடியூர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் கற்பூர சுந்தரபாண்டியன் (35). இவர் வீட்டிற்கு வரும் வழியில் டாஸ்மாக் மதுக்கடை அருகே சிலர் வாகனத்தை சாலையின் குறுக்கே நிறுத்தி இருந்தார்களாம். இதனை தட்டிகேட்டபோது கற்பூர சுந்தரபாண்டியனுக்கும் சூடியூர் மாரி மகன் வெங்கடேஸ்வரன் (27), அலெக்சாண்டர் மகன் அருண் (20), சதீஷ்குமார் (20) ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கற்பூரசுந்தரபாண்டியன் வீட்டில் இருந்தபோது மேற்கண்டவர்கள் வீட்டிற்குள் நுழைந்து அவரை அரிவாளால் வெட்டினார்களாம். இதுகுறித்து கற்பூரசுந்தர பாண்டியன் மனைவி சசிகலா அளித்த புகாரின் அடிப்படையில் பார்த்திபனூர் போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். 
குண்டர் சட்டம் பாய்ந்தது
இந்தநிலையில் மேற்கண்ட 2 சம்பவங்களில் கமுதி மரக்குளம் மணிவண்ணன் மற்றும் சூடியூர் வெங்கடேசுவரன் ஆகியோர் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பரிந்துரை செய்தார். அதனை ஏற்று மாவட்ட கலெக்டர் சந்திரகலா மேற்கண்ட 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தர விட்டார். இதன்படி 2 பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story