அவலாஞ்சியில் 10 செ.மீட்டர் மழை பதிவானது
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நேற்று அவலாஞ்சியில் 10 செ.மீட்டர் மழை பதிவானது. சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டன.
கூடலூர்
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நேற்று அவலாஞ்சியில் 10 செ.மீட்டர் மழை பதிவானது. சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டன.
மரங்கள் விழுந்தன
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. விட்டு, விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகனங்களை இயக்கினர்.
பலத்த காற்று காரணமாக நேற்று முன்தினம் இரவு ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை பைக்காரா முதல் அனுமாபுரம் வரை 4 மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரம் அறுக்கும் எந்திரம் மூலம் மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில் பிடிமானம் இல்லாமல் இருந்த மரங்கள் சாய்ந்து விழுந்தது தெரியவந்தது.
போக்குவரத்து பாதிப்பு
மஞ்சூர்-கிண்ணக்கொரை சாலை கேரிங்டன் பகுதியில் நேற்று மரம் முறிந்து விழுந்தது. இதனால் கிண்ணக்கொரை, இரியசீகையில் இருந்து மஞ்சூர், ஊட்டிக்கு வரும் 2 அரசு பஸ்கள் செல்ல முடியாமல் நின்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
தொடர்ந்து மாநில நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் பொதுமக்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றினர். 2 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் மழை பெய்து வருவதால் சாலையோரங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுவதை குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
மரம் விழுந்து கோவில் சேதம்
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கூடலூர் அருகே தேவாலாவில் இருந்து அத்திக்குன்னா செல்லும் சாலையில் நேற்று முன்தினம் இரவு மரம் சரிந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர்.
இதேபோல் தேவாலா அட்டி பகுதியில் உள்ள பாலமுருகன் கோவில் மீது ராட்சத மரம் நேற்று அதிகாலை சரிந்து விழுந்தது. இதில் கோவில் கோபுரம் மற்றும் மேற்கூரைகள் பலத்த சேதமடைந்தது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் பக்தர்கள் திரண்டு வந்த ராட்சத மரத்தை வெட்டி அகற்றினர். தொடர்ந்து வருவாய் துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர்.
அவலாஞ்சியில் 10 செ.மீட்டர் மழை
இதேபோல் கூடலூர் அருகே புளியாம்பாரா அட்டிக்கொல்லி பகுதியில் தொழிலாளி கனகராஜ் என்பவரது வீட்டின் மீது மரம் சரிந்து விழுந்தது. இந்த சமயத்தில் வீட்டில் இருந்த அவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.
இதையறிந்த கிராம மக்கள் விரைந்து வந்து அவர்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து மழை சேதங்கள் அதிகரித்து வருவதால், வருவாய்த்துறையினர் ஆய்வு நடத்தி சேத விவரங்களை கணக்கெடுத்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக அவலாஞ்சியில் 10 செ.மீட்டர் மழை பதிவானது. இதனால் அந்த வனப்பகுதியில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதுடன், கால்வாயில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மண்சரிவு
இதற்கிடையில், கூடலூர் தாலுகா தேவாலாவில் இருந்து கரிய சோலை செல்லும் சாலையில் வாழவயல் பகுதியில் நேற்று அதிகாலையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் வேறு பாதைக்கு திருப்பி விடப்பட்டது.
பின்னர் தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து காலை 11 மணிக்கு மண் குவியலை அகற்றினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.
Related Tags :
Next Story