கொட்டும் மழையில் ஆதிவாசி மக்களிடம் கோவை சரக டி.ஐ.ஜி. குறைகேட்பு


கொட்டும் மழையில் ஆதிவாசி மக்களிடம் கோவை சரக டி.ஐ.ஜி. குறைகேட்பு
x
தினத்தந்தி 15 July 2021 10:46 PM IST (Updated: 15 July 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே கொட்டும் மழையிலும் ஆதிவாசி மக்களை சந்தித்து கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி குறை கேட்டார்.

கூடலூர்

கூடலூர் அருகே கொட்டும் மழையிலும் ஆதிவாசி மக்களை சந்தித்து கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி குறை கேட்டார். 

கொட்டும் மழையில் குறைகேட்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட ஆதிவாசி கிராமம் கொத்தாடி புதூர். இங்கு நேற்று மாலை 4.30 மணியளவில் கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி வந்தார். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. ஆனாலும் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஆதிவாசி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது கிராமத்தில் எந்த பேர் படித்துள்ளனர் என விசாரித்தார். இதில் வாலிபர் ஒருவர் எம்.எஸ்.சி. படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பதும், பலர் படிப்பை தொடர முடியாமல் கைவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து வாலிபருக்கு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஐ.ஜி. தெரிவித்தார்.  

நிவாரண பொருட்கள்

தொடர்ந்து 38 குடும்பங்களுக்கு கம்பளி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை டி.ஐ.ஜி. முத்துசாமி வழங்கினார். இதேபோல் ஆதிவாசி சிறுவர்களுக்கு இனிப்பு, எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து டி.ஐ.ஜி. முத்துசாமி ஆதிவாசி மக்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆதிவாசி மக்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவார்கள். 

உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர கலெக்டர் மற்றும் பிற துறை அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமியை ஆதிவாசி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நிவாஸ், கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சசிகுமார்,தேவர்சோலை பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் ஆதிவாசி மக்கள் கலந்து கொண்டனர்.

Next Story