மந்திரகிரி வேலாயுதசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ 6½ கோடி நிலம் மீட்பு


மந்திரகிரி வேலாயுதசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ 6½ கோடி நிலம் மீட்பு
x
தினத்தந்தி 15 July 2021 10:55 PM IST (Updated: 15 July 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

செஞ்சேரிமலையில் உள்ள மந்திரகிரி வேலாயுதசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.6½ கோடி நிலம் மீட்கப்பட்டது.

சுல்தான்பேட்டை

செஞ்சேரிமலையில் உள்ள மந்திரகிரி வேலாயுதசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.6½ கோடி நிலம் மீட்கப்பட்டது. 

மந்திரகிரி வேலாயுதசாமி கோவில் 

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட செஞ்சேரிமலையில் மந்திரகிரி வேலாயுதசாமி கோவில் உள்ளது. மிகவும் புகழ்வாய்ந்த இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் பல கிராமங்களில் உள்ளன. அதில் பல இடங்களில் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தது தெரியவந்தது. எனவே அந்த நிலங்களை அடையாளம் கண்டு அவற்றை மீட்க தமிழக அரசு உத்தரவிட்டது. 

அதிகாரிகள் ஆய்வு 

அதன்படி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சுல்தான் பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட போகம்பட்டி, பொன்னாக்கானி ஆகிய பகுதியில் கோவிலுக்கு சொந்தமான 25.40 ஏக்கர் நிலம் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை கோவை உதவி ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் கோவில் செயல் அதிகாரி தீபா, கோவை கோனியம்மன் கோவில் செயல் அதிகாரி கைலாசமூர்த்தி மற்றும்  ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 

கோவில் நிலம் மீட்பு 

பின்னர் அவர்கள் அங்கு ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலத்தை மீட்டு, கோவிலுக்கு சொந்தமான நிலம் என்று அறிவிப்பு பலகை வைத்தனர்.

 முன்னதாக அங்கு சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சுல்தான்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் குப்புராஜ் ஆகியோர் தலைமை யில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- 

ரூ.6½ கோடி

செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசாமி கோவிலுக்கு சொந்தமான 25.40 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு ரூ.6½ கோடிக்கும் மேல் இருக்கும். 

மீட்கப்பட்ட நிலத்தில், கோவிலுக்கு சொந்தமான நிலம், அத்துமீறி யாரும் நுழையக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. மீட்கப்பட்ட நிலம் விரைவில் குத்தகைக்கு விட நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும் இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் வேறு எந்த பகுதியில் எல்லாம் ஆக்கிரமிப்பில் உள்ளது என்பது குறித்து கண்டறிந்து அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story