230 பேருக்கு மலைவாழ் பழங்குடியின சாதி சான்றிதழ். கலெக்டர் வழங்கினார்


230 பேருக்கு மலைவாழ் பழங்குடியின சாதி சான்றிதழ். கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 15 July 2021 11:24 PM IST (Updated: 15 July 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

புலியூர் மலை கிராமத்தில் 230பேருக்கு மலைவா]் பழங்குடியின சாதி சான்றிதழ்களை கலெக்டர் அமர் குஷ்வாஹா வழங்கினார்.

திருப்பத்தூர்

230 பேருக்கு சாதி சான்றிதழ்

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் நெல்லிவாசல் நாடு ஊராட்சியில் உள்ள புலியூர் மலை கிராமத்தில் 230 பேருக்கு பழங்குடியின மலையாளி சாதி சான்றிதழ் (எஸ்.டி) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தாசில்தார் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் ரேவதி வரவேற்றார்.

இதில் கலெக்டர் அமர்குஷ்வாஹா, சி.என். அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ‌.நல்லதம்பி, க. தேவராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சாதி சான்றிதழ் வழங்கினர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

சான்றிதழ் முக்கியம்

4 வருடங்களுக்கு மேல் புதூர் நாடு, நெல்லி வாசல் நாடு, புங்கம்பட்டி நாடு மக்கள் பழங்குடியினர் சாதி சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்து நிலுவையில் உள்ளதாக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்த பிரச்சனை மீது தனி கவனம் செலுத்தி தீர்வு காண அறிவுறுத்தியதன்பேரில் சப்-கலெக்டர் விரைவாக செயல்பட்டு 500-க்கும் மேற்பட்ட மனுதாரரிடம் நேரடியாக விசாரணை செய்து அவற்றில் 333 நபர்கள் தேர்ந்தெடுத்து முதல்கட்டமாக 230 பேருக்கு மலையாளி சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. 

நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விசாரணை செய்து சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியின சாதி சான்றிதழ் மிகவும் முக்கியமானது. மலைவாழ் மக்களின் பிள்ளைகள் படிப்பு, வேலை வாய்ப்பு, சுயதொழில் கடன் உதவிகள் பெறவும் சான்று அவசியம். அரசின் இட ஒதுக்கீடுகளை பெற்று தங்களின் அடுத்த தலைமுறை முன்னேற்றமடைய சான்றிதழ் அவசியம். இதனை கருத்தில் கொண்டு உடனடியாக விசாரணை செய்து வழங்கப்பட்டுள்ளது. 

கொரோனா தடுப்பூசி

இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, மின்சாரம், வேலைவாய்ப்பு, கடன் உதவிகள் உள்பட தேவையான பிரச்சினைகள் இருந்தால் அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மலைவாழ் மக்கள் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 
நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் அத்தீப் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Next Story