மாற்றுத்திறனாளிகள் ஏற்றம் பெற தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்


மாற்றுத்திறனாளிகள் ஏற்றம் பெற  தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்
x
தினத்தந்தி 15 July 2021 11:29 PM IST (Updated: 15 July 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஏற்றம் பெற தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

நாகர்கோவில்:
மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஏற்றம் பெற தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
நலத்திட்ட உதவி
குமரி மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் விலையில்லா தையல் எந்திரம், ஏழைப்பெண்களுக்கு திருமணத்திற்காக தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய செல்போன், நவீன சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், ஊன்றுகோல் போன்றவை வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னேற்றப் பாதையில்...
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் வழியில் செயல்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப்பொறுப்பு ஏற்ற நாளிலிருந்து, பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அதனை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. 
மாற்றுத்திறன் உடையவர்களில் பலர் தன்னம்பிக்கையுடன், சமூகத்தில் பிறருக்கு இணையாக பல்வேறு படிப்புகளை படித்து வருகின்றனர். இவர்களில் வேலையில்லாமல் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் நலனை கருத்தில்கொண்டு, அவர்கள் வாழ்வில் ஏற்றம் பெற முதல்-அமைச்சரின் தலைமையிலான அரசு உறுதுணையாக இருக்கும். அதுபோல் மகளிர் சார்ந்த பிரச்சினைகள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வன்முறைகளை முற்றிலும் ஒழித்து பெண்களுக்கு பாதுகாப்பான அரசாக என்றென்றும் திகழ்வதோடு, அவர்கள் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தங்க நாணயங்கள்
அதன் அடிப்படையில் இன்று குமரி மாவட்ட சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் வாயிலாக ஏழைப்பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.4,474 மதிப்பில் 125 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 59ஆயிரத்து 300 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரங்களும், ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 52 பேருக்கு (தலா ரூ.25 ஆயிரம் வீதம்) ரூ.13 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவித் தொகையும், ரூ.20 லட்சத்து 32 ஆயிரத்து 680  மதிப்பிலான தங்க நாணயங்களும் என மொத்தம் ரூ.33 லட்சத்து 32ஆயிரத்து 680 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட 87 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.12,799 மதிப்பில் தக்க செயலிகளுடன் கூடிய செல்போன்களும், செவிதிறன் பாதிக்கப்பட்ட 105 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.12,799 மதிப்புள்ள தக்க செயலிகளுடன் கூடிய செல்போன் களும், ஒரு பயனாளிக்கு ரூ.99,999 மதிப்பிலான மின்கலத்தால் இயங்கும் நவீன சக்கர நாற்காலியும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.7,650 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்களும், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.1,080 மதிப்பிலான ஊன்று கோல்கள் என மொத்தம் 199 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சத்து 77ஆயிரத்து 27 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அதிகாரி சரோஜினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி சிவசங்கரன், பயனாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story