வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் 3 இடங்களில் தடுப்பணை
வேலூர் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே 3 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் இடங்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர்
கலெக்டர் ஆய்வு
வேலூர் மாவட்டத்தில் இறைவன்காடு கிராமம் அருகே பாலாறு-கொட்டாறு பிரியும் இடம், பொய்கை, சேண்பாக்கம் பகுதிகளில் பாலாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணைகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பணைகள் கட்டப்படும் இடங்களை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தடுப்பணையின் நீளம், உயரம், திட்ட மதிப்பீடு, அணையின் மூலம் பயன்பெறும் பகுதிகள் உள்ளிட்ட விவரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் ரமேஷ், குமாரன், உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன் மற்றும் உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.
ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறியதாவது:-
3 இடங்களில் தடுப்பணை
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 127 கிலோமீட்டர் தூரம் பாலாறு பாய்கிறது. இறைவன்காடு கிராமம் அருகே பாலாறு பிரிந்து கொட்டாறாக 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு பின்னர் மீண்டும் ஒன்றாக இணைகிறது. பாலாற்றில் நீர் வரும்போது கொட்டாற்றில் செல்லாமல் பாலாறு வழியாக மட்டும் சென்று விடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். எனவே பாலாறு-
கொட்டாறு பிரியும் இடத்தில் 680 மீட்டர் நீளத்துக்கு படுக்கை அணை கட்டப்பட உள்ளது. இதன்மூலம் கொட்டாறு செல்லும் 7 கிலோமீட்டர் பகுதியின் நிலத்தடிநீர் உயரும். மேலும் அதனை ஒட்டியுள்ள நிலங்கள் பயன்பெறும்.
பொய்கை கிராமத்தில் பாலாற்றில் 200 மீட்டர் நீளம் மற்றும் 1½ மீட்டர் உயரத்தில் தடுப்பணை அமைக்கப்பட உள்ளது. இந்த தடுப்பணையை சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் பகுதியின் நிலத்தடி நீர் செறிவூட்டப்படும். இந்த திட்டத்தின் மூலம் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட பொய்கை மற்றும் கொத்தமங்கலம் கிராமங்கள் பயன்பெறும். சேண்பாக்கம் கிராமம் அருகே பாலாற்றின் குறுக்கே 675 மீட்டர் நீளத்தில் தரைகீழ் தடுப்பணை கட்டப்பட உள்ளது. இதன்மூலம் வேலூர், சேண்பாக்கம் மற்றும் கருகம்புதூர் கிராமங்கள் மற்றும் காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட விருதம்பட்டு மற்றும் தண்டலம் கிருஷ்ணாபுரம் கிராமங்களில் நிலத்தடி நீர் செறிவூட்டும் முறையில் பயன்பெறும். மேலும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியும். தடுப்பணைகள் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
Related Tags :
Next Story