100 நாள் வேலை கேட்டு நெய்தலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
100 நாள் வேலை கேட்டு நெய்தலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்
நச்சலூர்
பொதுமக்கள் முற்றுகை
கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம் நெய்தலூர் ஊராட்சியில் 100 நாள் வேலை செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நெய்தலூர் ஊராட்சி முழுவதும் 5 பணி தள பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அந்தந்த பகுதி மக்களுக்கு பணிகளை ஒதுக்கி வேலை நடைபெற்று வருகின்றன. இதையடுத்து நெய்தலூர் ஊராட்சிக்குட்பட்ட பனையூர், தெற்குப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு 100 நாள் வேலை செய்யும் பணியை கடந்த சில வாரங்களாக தரப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பனையூர், தெற்குப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று 100 நாள் வேலை கேட்டு நெய்தலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றிகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள், கடந்த சில வாரங்களாக எங்களுக்கு 100 நாள் பணி தரப்படவில்லை. இதனால் வேலையின்றி வருமானம் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்து வருகின்றோம். இது குறித்து பல முறை ஊராட்சி மன்ற அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றனர்.
இதையடுத்து அதிகாரிகள் கூறுகையில், அடுத்த வாரம் 100 நாள் பணி ஒதுக்கப்பட்டு வேலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, 100 நாள் வேலை வழங்கவில்லை என்றால் தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று போராட்டம் நடத்துவதாக கூறி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story