அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை அமைச்சர் கயல்விழி பேட்டி
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கயல்விழி கூறினார்.
கரூர்
வளர்ச்சி பணிகள்
கரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் வந்தார். அவரை கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் புத்தகம் வழங்கி வரவேற்றார்.
இதையடுத்து அமைச்சர், கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி, புன்னம், வெள்ளியணை, சின்னமநாயக்கன்பட்டி, காந்திகிராமம் ஆகிய பகுதிகளில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான அரசு ஆதிதிராவிடர் நல மாணவ, மாணவிகள் விடுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், புதிய விடுதிகளின் கட்டுமானப்பணிகள் குறித்தும் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கினார்.
காமராஜர் பிறந்தநாள் விழா
வெள்ளியணை வடக்கு செல்லாண்டிபாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை அமைச்சர் பெற்றுக்கொண்டார்.
க.பரமத்தி அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி, புன்னம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த காமராஜரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அமைச்சர் பேட்டி
பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில்,
கரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 29 பள்ளிகளும், 19 விடுதிகளும் இயங்கி வருகின்றன. இதில் 12,982 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 ேகாடியே 62 லட்சம் அளவில் கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாட்கோ மூலம் கடவூர் மற்றும் தான்தோன்றி பகுதிகளில் தலா ரூ.244.41 லட்சம் மதிப்பில் கல்லூரி மாணவர்கள் 100 பேர் தங்கும் வகையில் விடுதி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றது. வாங்கல் குப்புச்சிப்பாளையத்தில் ரூ.98 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலும், சனப்பிரட்டியில் ரூ.51 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலும் சமுதாயக்கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. நந்தன்கோட்டை ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் ரூ.35 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
தற்போது கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருக்கின்றன. அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கையினை அதிகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story