தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கும், விவசாயிகளுக்கும் பா.ஜ.க. துணை நிற்கும்; அண்ணாமலை பேட்டி


தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கும், விவசாயிகளுக்கும் பா.ஜ.க. துணை நிற்கும்; அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 15 July 2021 7:24 PM GMT (Updated: 15 July 2021 7:24 PM GMT)

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கும், விவசாயிகளுக்கும் பா.ஜ.க. துணை நிற்கும் என்று அண்ணாமலை கூறினார்.

பெரம்பலூர்:

தமிழக பா.ஜ.க. மாநில தலைவராக அண்ணாமலை புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக பா.ஜ.க.வில் சித்தாந்தம், அரசியல் களம், தலைவர்கள் சிறப்பாக உள்ளதால் தமிழகத்தில் 2026-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று கூறியிருந்தேன். தற்போது தமிழக மக்களுக்கு பா.ஜ.க.வின் மேல் பிடிப்பு வந்துள்ளது. கொங்குநாடு பிரச்சினையை பா.ஜ.க. எடுக்கவில்லை. தற்போது தமிழகத்தில் சம்பந்தமில்லாமல் ஒன்றிய அரசு என்று கூறி தி.மு.க. அரசியல் செய்து வருகிறது.
கர்நாடக மாநில அரசு மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கும், விவசாயிகளுக்கும் பா.ஜ.க. துணை நிற்கும். ஆன்லைன் ஊடகங்களுக்கு மத்திய அரசு சட்டம் இயற்றும்போது பொய் செய்திகள் பரப்புவது தவிர்க்கப்படும். இந்தியா, தமிழ்நாடு ஒற்றுமையாக நன்றாக இருக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் நிலைப்பாடு. தேர்தல் வாக்குறுதியில் அளித்ததுபோல் தி.மு.க. அரசு முதலில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story