ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்


ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
x
தினத்தந்தி 16 July 2021 12:54 AM IST (Updated: 16 July 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தா.பழூர்:
கோவில்களில் வழக்கமாக நடராஜப்பெருமானுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6 நாட்கள் மட்டும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுவது வழக்கம். அதிலும் ஆனி மாதம் நடைபெறும் ஆனித் திருமஞ்சனம் மற்றும் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் ஆகிய நாட்களில் நடைபெறும் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதன்படி அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு மஞ்சள்பொடி, மாப்பொடி, திரவியப்பொடி, வில்வப்பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நடராஜ பெருமான், சிவகாமி அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. நடராஜப் பெருமான், சிவகாமி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதைத்தொடர்ந்து நடராஜப் பெருமான், சிவகாமி அம்மன் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம், நடராஜப் பத்து முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆனித்திருமஞ்சன வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்தனர். கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Next Story