கோழிகள் ஏற்றி வந்த சரக்கு வேன் கவிழ்ந்து ஒருவர் பலி
பொன்னமராவதி அருகே கோழிகள் ஏற்றி வந்த சரக்கு வேன் கவிழ்ந்து ஒருவர் பலியானார். மற்றொரு விபத்தில் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலரின் கணவர் உயிரிழந்தார்.
பொன்னமராவதி
கோழிகள் ஏற்றி வந்த சரக்கு வேன் கவிழ்ந்தது
பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் எல்லைக்காட்டு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் சிவகங்கை மாவட்டம் கரிசல்பட்டியிலிருந்து பிராய்லர் கோழிகள் ஏற்றி வந்த சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அந்த சரக்கு வேனின் டிரைவர் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதி வந்தனாக்குறிச்சியை சேர்ந்த முகமது ரபீக் (வயது 36) சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்த தகவலின்பேரில், பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முகமது ரபீக் உடலை மீட்டு பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரக்கு வேனில் வந்த மற்ற 2 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும்,சரக்கு வேனில் ஏற்றி வரப்பட்ட சில கோழிகளும் உயிரிழந்தன. இந்த விபத்து குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விபத்து
திருமயம் அருகே உள்ள தாளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆண்டியப்பன் (65). இவரது மனைவி வள்ளிக்கண்ணு. கோட்டூர் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். சம்பவத்தன்று ஆண்டியப்பன், மகன் சுரேசுடன்(27) மோட்டார் சைக்கிளில் தாளம்பட்டியிலிருந்து திருமயம் வந்துவிட்டு அங்கிருந்து தாளம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை சுரேஷ் ஓட்ட, பின்னால் ஆண்டியப்பன் அமர்ந்திருந்தார். அவர்கள் பொன்னமராவதி சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஆண்டியப்பன் மீது லாரி ஏறியது. சுரேஷ் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்தை கண்டதும் அந்த வழியாக சென்றவர்கள் ஆண்டியப்பனை மீட்டு சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story