9 அரசு அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை


9 அரசு அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை
x
தினத்தந்தி 16 July 2021 1:57 AM IST (Updated: 16 July 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின்பேரில், கர்நாடகத்தில் 9 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் நேற்று ஊழல் தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். பெங்களூரு உள்பட 35 இடங்களில் இந்த சோதனை நடந்தது.

பெங்களூரு:

சொத்து குவிப்பு புகார்

  தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நகர வளர்ச்சி அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் ஸ்ரீதர். இதுபோல உடுப்பியில் உள்ள கர்நாடக ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தில் முதன்மை பொறியாளராக பணியாற்றுபவர் குல்கர்னி, அதே வாரியத்தில் நிர்வாக பொறியாளராக பணியாற்றும் கிருஷ்ணா.

  கோலார் மாவட்டம் மாலூரில் நகர வளர்ச்சி வாரியத்தில் உதவி இயக்குனராக பணியாற்றும் கிருஷ்ணப்பா, பீதரில் நகர வளர்ச்சி துறையில் இணை பொறியாளராக பணியாற்றும் சுரேஷ், மண்டியாவில் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் வெங்கடேஷ், விஜயாப்புராவில் மின்வாரியத்தில் உதவி பொறியாளராக பணியாற்றும் சீதாராம் மல்லிகார்ஜூன், பல்லாரியில் மின்வாரியத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் விஜயகுமார், பெங்களூரு கோரமங்களாவில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 9 பேரும் தங்களது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்து வைத்திருப்பதாக ஊழல் தடுப்பு படையினருக்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன.

35 இடங்களில் சோதனை

  இந்த நிலையில் நேற்று ஊழல் தடுப்பு படை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபிரகாஷ் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார், ஸ்ரீதர், கிருஷ்ணா, குல்கர்னி, கிருஷ்ணப்பா, சுரேஷ், வெங்கடேஷ், சீதாராம் மல்லிகார்ஜூன், விஜயகுமார், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 9 அதிகாரிகள் வீடுகள், அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை வரை நீடித்தது.

  பெங்களூரு, மங்களூரு, உடுப்பி, கோலார், மாலூர், தாவணகெரே, சிவமொக்கா, சன்னகிரி, மண்டியா, ராமநகர், விஜயாப்புரா, பல்லாரி, மைசூரு உள்ளிட்ட 35 இடங்களில் ஊழல் தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

சொத்து ஆவணங்கள் பறிமுதல்

  இந்த சோதனையின் போது 9 அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்தும் கணக்கில் வராத பணம், தங்கநகைகள், அதனை வாங்கியதற்கான ஆவணங்கள், சொத்து ஆவணங்கள், வீட்டு மனை பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை ஊழல் தடுப்பு படையினர் பறிமுதல் செய்து எடுத்து சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

  மேலும் 9 அதிகாரிகளுக்கும் ஊழல் தடுப்பு படையினர் விசாரணைக்கு ஆஜராக நோட்டீசு அனுப்ப முடிவு செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரே நாளில் 9 அரசு அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்தியது சக அரசு அதிகாரிகள், ஊழியர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story