கடலோர கர்நாடகாவில் தொடர் கனமழை


கடலோர கர்நாடகாவில் தொடர் கனமழை
x

கடலோர கர்நாடக மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மங்களூரு:


கடலோர கர்நாடகா

  கடலோர கர்நாடக மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக உடுப்பி, உத்தரகன்னடா, தட்சிணகன்னடா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தட்சிணகன்னடா மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்யத் தொடங்கிய மழை நேற்று மாலை வரை நீடித்தது. பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

  தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நேத்ராவதி, குமாரதாரா, பால்குனி ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் தரைமட்ட பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

சிற்றோடையில் வெள்ளம்

  மங்களூருவில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 60.3 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பண்ட்வால், பெல்தங்கடி, சுள்ளியா உள்பட மாவட்டம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கனமழைக்கு ஒரு வீடு இடிந்துள்ளது.

  இந்த நிலையில் சுள்ளியா தாலுகா ஜால்சூர் கிராமத்தை சேர்ந்த ஒரு மூதாட்டி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அந்த கிராமத்திற்கு சாலை வசதி கிடையாது. இதனால் அந்த வழியாக செல்லும் சிற்றோடையை கடந்து தான் அந்தப் பகுதி மக்கள் சுள்ளியா செல்ல வேண்டிய நிலை உள்ளது.

பாலம் கட்டாததால்...

  தொடர் மழையால் சிற்ேறாடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை இளைஞர்கள் சிலர் ஸ்டிரைச்சரில் படுக்கவைத்து ஆற்றை கடந்து தூக்கி சென்றனர்.
  தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிற்றோடை மேல் பாலம் கட்டாததால் இந்த நிலை நீடிப்பதாக அந்த கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

உடுப்பி- உத்தரகன்னடா

  உடுப்பி மாவட்டம் கார்கலா, காபு குந்தாபுரா பகுதிகளிலும் கனமழை கொட்டியது. உடுப்பி மாவட்டத்தில் உள்ள சவுபார்ணிகா, சீதா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக பிரசித்தி பெற்ற கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகா மற்றும் உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கனமழைக்கு உடுப்பி மாவட்டத்தில் 6 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

  உத்தர கன்னட மாவட்டம் கார்வார், சிர்சி, பட்கல், முருடேஸ்வர் எல்லாப்புரா பகுதிகளிலும் நேற்று பகலில் கனமழை கொட்டியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் பல இன்னல்களை சந்தித்தனர்.

மழை நீடிக்கும்

  மொத்தத்தில் தொடர் மழையால் கடலோர கர்நாடக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

  இதற்கிடையே கடலோர மாவட்டங்களில் 20-ந்தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Next Story