போலீஸ்காரர் வீட்டில் நகை-பணம் திருட்டு


போலீஸ்காரர் வீட்டில் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 16 July 2021 2:43 AM IST (Updated: 16 July 2021 2:43 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரம் அருகே போலீஸ்காரர் வீட்டில் நகை-பணம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

விக்கிரமசிங்கபுரம்:
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அகஸ்தியர் பட்டி வியாசர் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் ராமானுஜம் (வயது 33). இவர் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது மனைவி உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக செங்கோட்டை சென்றுவிட்டார். சுந்தர் ராமானுஜம் இரவு பணிக்கு வந்து விட்டார். இதனால் வீட்டில் யாரும் இல்லை.

இதை அறிந்த மர்ம நபர்கள் இரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் தங்க நகைகளை திருடிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நகை எவ்வளவு இருந்தது என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. 

இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் திருட்டு சம்பவம் நடந்த போது, அந்த பகுதியில் மின்தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதை பயன்படுத்தி மர்ம நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

இதேபோல் அருகில் உள்ள கோபால்நகர் சர்ச் தெருவைச் சேர்ந்த செல்வம் என்பவரது வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த டி.வி.டி.பிளேயரை திருடி சென்று உள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story