சமூக விரோதிகளின் கூடாரமாகி வரும் ரெயில் நிலையம்
மடத்துக்குளம் ரெயில் நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் மன வேதனை அடைந்துள்ளனர்.
போடிப்பட்டி
மடத்துக்குளம் ரெயில் நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் மன வேதனை அடைந்துள்ளனர்.
சரக்கு போக்குவரத்து
மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் பல காகித ஆலைகள், நூற்பாலைகள் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த பகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இவர்களுக்கான மூலப்பொருட்கள் கொண்டு வருவதற்கும் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கும் வெளியூர்களுக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதற்கு பெரும்பாலும் சரக்கு வாகனங்களையே பயன்படுத்தும் நிலை உள்ளது. மேலும் இந்த பகுதி மக்கள் வேலை நிமித்தமாகவும், பல்வேறு பணிகளுக்காகவும் வெளியூர்களுக்கு செல்வதற்கு பெருமளவு பஸ்களையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இதற்கு மாற்றாக ரெயில் பயணத்தை ஊக்குவிக்கவும், ரெயில் மூலம் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஆனால் மடத்துக்குளம் ரெயில் நிலையம் மேம்படுத்தப்படாதது மட்டுமல்லாமல் போதிய பராமரிப்பில்லாமல் அவல நிலையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மதுப்பிரியர்கள்
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
பொள்ளாச்சியிலிருந்து உடுமலை வழியாக பழனி பகுதிக்கு செல்லும் ரெயில்கள் அனைத்தும் மடத்துக்குளம் ரெயில் நிலையத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். ஆனால் இவ்வாறு கடந்து செல்லும் ரெயில்களை வேடிக்கை பார்க்கும் வாய்ப்பு மட்டுமே மடத்துக்குளம் மக்களுக்குக் கிடைக்கிறது. தாலுகா தலைமையகமாக இருந்தும் பெரும்பாலான ரெயில்கள் இங்கு நிற்பதில்லை. இதனால் ரெயில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் உடுமலை அல்லது பழனி சென்றே ரெயில் ஏற வேண்டும்.
மடத்துக்குளம் ரெயில் நிலையத்தை மேம்படுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதிலும் கொரோனா ஊரடங்கு காலத்துக்குப் பிறகு இன்னும் பல ரெயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் மடத்துக்குளம் ரெயில் நிலையம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. இங்குள்ள பயணிகள் அமரும் இருக்கைகள் மதுப்பிரியர்கள் அமர்ந்து மது அருந்துவதற்காகவே அமைக்கப்பட்டதோ என்று எண்ணுமளவுக்கு மாலை வேளையில் பலரும் இதில் அமர்ந்து மது அருந்துகின்றனர். அத்துடன் மது பாட்டில்களை அங்கேயே உடைத்து வீசிச் செல்கின்றனர். இதனால் ஆங்காங்கே கண்ணாடித் துண்டுகள் பயணிகளின் பாதங்களைப் பதம் பார்ப்பதற்காகக் காத்திருக்கின்றன. மேலும் ரெயில் நிலையத்தில் குடிநீர் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இங்கு பல்வேறு சமூக விரோத செயல்களும் நடைபெறுகிறது.
விஷ ஜந்துக்கள்
இங்குள்ள கழிப்பறை பயன்பாடில்லாமல் நீண்ட நாட்களாக பூட்டியே இருக்கிறது. இந்த பகுதியையொட்டிய பஸ் நிலையத்திலும் இலவச கழிப்பறைகள் பயன்பாட்டில் இல்லை. இதனால் பஸ் நிலையம் வரும் பயணிகள் மற்றும் அந்த பகுதியிலுள்ள வணிகர்கள், வாகன ஓட்டிகள் என பலரும் ரெயில் நிலையத்தையே கழிவறையாக பயன்படுத்துகின்றனர். பல இடங்களில் கந்தல் துணிகளும் குப்பைகளும் குவிந்து கிடக்கிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. பல்வேறு சுகாதார சீர்கேடுகளும் ஏற்படும் அபாயம் உள்ளது.
அத்துடன் ரெயில் நிலையத்தின் பல பகுதிகளில் புதர்ச்செடிகள் மற்றும் சீமைக்கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் இங்கு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் சுதந்திரமாக உலா வருகின்றன. தற்போதைய நிலையில் கைவிடப்பட்ட ரெயில் நிலையம் போன்ற தோற்றத்தில்தான் மடத்துக்குளம் ரெயில் நிலையம் உள்ளது. மடத்துக்குளம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ரெயில் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடிப்படை வசதிகள்
குறிப்பாக குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். தேவையற்ற நபர்கள் உள்ளே நுழைவதைத் தடுக்க வேண்டும். மடத்துக்குளம் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும். ரெயில் நிலையத்தில் முன் பதிவு வசதி ஏற்படுத்த வேண்டும். சரக்குகளை கையாளும் வகையில் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். இவ்வாறான வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் மடத்துக்குளம் ரெயில் நிலையத்தை அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயன்படுத்தும் நிலை உருவாகும். ரெயில் நிலையத்துக்கு அருகிலேயே பஸ் நிலையம், போலீஸ் நிலையம், தாலுகா அலுவலகம், நீதிமன்றம், பொதுப்பணித்துறை அலுவலகம், கருவூலம், பேரூராட்சி அலுவலகம், வார சந்தை வளாகம் என அனைத்தும் அமைந்திருப்பது ரெயில் நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க பெரிதும் உதவும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story