விபத்தில் காயமடைந்த போலீஸ்காரர் சாவு
சங்கரன்கோவில் அருகே விபத்தில் காயமடைந்த போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.
பனவடலிசத்திரம்:
சங்கரன்கோவில் அருகே நகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தனபாண்டி மகன் மாரிச்சாமி (வயது 27). இவர் சிவகிரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் நெல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக சிவகிரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். குருக்கள்பட்டி அடுத்த மேலநீலிதநல்லூர் தனியார் கல்லூரி அருகே சென்றபோது நெல்லையில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த மாரிச்சாமிக்கு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் மாரிச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த சங்கரன்கோவில் அருகே பெருங்கோட்டூரைச் சேர்ந்த கருப்பசாமியிடம் விசாரித்து வருகின்றனர். கருப்பசாமி, தென்காசியில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
இறந்த மாரிச்சாமியின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான நகரத்தில் நேற்று நடந்தது. 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் மாரிச்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகீர் உசேன் மற்றும் போலீசார் கலந்து கொண்டு அஞ்சலி ெசலுத்தினர். மாரிச்சாமிக்கு வருகிற செப்டம்பர் மாதம் திருமணம் நடத்த ஏற்பாடு செய்து இருந்ததாக உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story