கோயம்பேட்டில் ரூ.25 லட்சம் கேட்டு ஆடிட்டரின் உதவியாளர் கடத்தல்


கோயம்பேட்டில் ரூ.25 லட்சம் கேட்டு ஆடிட்டரின் உதவியாளர் கடத்தல்
x
தினத்தந்தி 16 July 2021 11:07 AM IST (Updated: 16 July 2021 11:07 AM IST)
t-max-icont-min-icon

கோயம்பேட்டில் ரூ.25 லட்சம் கேட்டு ஆடிட்டரின் உதவியாளர் கடத்தப்பட்டார். இதுபற்றி அவரது மனைவி புகார் அளித்த சில மணிநேரங்களில் அவரை போலீசார் மீட்டனர்.

பூந்தமல்லி, 

தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர் சக்தி வடிவேலன் (வயது 35). இவர், ஆடிட்டர் ஒருவரிடம் உதவியாளராக பணி புரிந்து வருகிறார். இவரது மார்பில் கட்டி இருந்ததால் அதற்கு மருத்துவ ஆலோசனை பெற தன்னுடைய மனைவி செல்சியா (25) உடன் நேற்று தர்மபுரியில் இருந்து பஸ்சில் சென்னை வந்தார்.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் மனைவியை அமர வைத்துவிட்டு நண்பரை பார்த்துவிட்டு வருவதாக கூறிச்சென்றார். சிறிது நேரத்தில் அவரது மனைவியின் செல்போனில் தொடர்பு கொண்ட நபர், உங்கள் கணவர் சக்தி வடிவேலனை கடத்தி விட்டோம். ரூ.25 லட்சம் கொடுத்தால் விடுவிப்போம் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்சியா, இதுபற்றி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேரடியாக சென்று புகார் அளித்தார். இதுபற்றி அண்ணாநகர் துணை கமிஷனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தனிப்படைகள் அமைத்து மர்மநபர் பேசிய செல்போன் சிக்னலை வைத்து விசாரித்தனர்.

அதில் குன்றத்தூர் அடுத்த மலையம்பாக்கத்தில் உள்ள ஒரு கம்பெனியில் இருப்பதாக காட்டியது. அங்கு சென்ற போலீசார், கடத்தப்பட்ட சக்திவடிவேலனை பத்திரமாக மீட்டனர். அவரை கடத்தியதாக ஸ்டாலின் (40), அஜ்மல் செரிப் (44), கருப்பையா (62), வினோத்குமார் (47) ஆகிய 4 பேரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

சக்திவடிவேலன், பெரியசாமி என்பவரிடம் ரூ.2 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவரை கடத்தினார்களா? அல்லது அந்த கடனை அடைப்பதற்கு அவரது நண்பர்களுடன் சேர்ந்து சக்திவடிவேலனே கடத்தல் நாடகத்தில் ஈடுபட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இதற்கு மூளையாக செயல்பட்ட பெரியசாமி என்பவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மனைவி புகார் அளித்த சில மணிநேரங்களிலேயே, கடத்தப்பட்ட அவரது கணவரை தனிப்படை போலீசார் மீட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story