நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேருக்கு வலைவீச்சு


நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 16 July 2021 5:02 PM IST (Updated: 16 July 2021 5:02 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 7½ பவுன் நகையை, மோட்டார்சைக்கிளில் வந்து பறித்து சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி:
தேனி ஸ்ரீராம்நகரை சேர்ந்த முனியாண்டி மனைவி பொன்னுத்தாய் (வயது 58). இவருடைய கணவர் இறந்து விட்டார். இவருடைய மகன் சடையாண்டி பெரியகுளம் சாலையில் மருந்துக்கடை வைத்துள்ளார். பொன்னுத்தாய் தினமும் பகலில் அந்த மருந்துக்கடைக்கு செல்வது வழக்கம்.
அதன்படி நேற்று அவர் தனது வீட்டில் இருந்து மருந்துக்கடைக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். கோட்டைக்களம் பகுதியில் நடந்து சென்ற போது அவரை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அதை ஓட்டி வந்தவர் ஹெல்மெட் அணிந்து இருந்தார். பின்னால் அமர்ந்து இருந்தவர் முககவசம் அணிந்து இருந்தார். பொன்னுத்தாய் அருகில் சென்றதும் அவருடைய கழுத்தில் அணிந்து இருந்த 7½ பவுன் நகையை, மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த நபர் பறித்தார்.
2 பேருக்கு வலைவீச்சு
இதை சற்றும் எதிர்பாராத பொன்னுத்தாய் நிலை குலைந்து கீழே விழுந்தார். அதற்குள் அந்த இருவரும் நகையை பறித்துக் கொண்டு மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து பொன்னுத்தாய் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதனிடையே சம்பவம் நடந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story