கட்டுமான பணியை நிறுத்த வேண்டும்
அவினாசி அருகே ராக்கியாபாளையத்தில் போலீஸ் நிலையம் கட்டுமான பணியை நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகம் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்
திருப்பூர்
அவினாசி அருகே ராக்கியாபாளையத்தில் போலீஸ் நிலையம் கட்டுமான பணியை நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகம் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
போலீஸ் நிலையம்
அவினாசி தாலுகா ராக்கியாபாளையம் பகுதி பொதுமக்கள், நெசவாளர்கள் மற்றும் மாரியம்மன் கோவில், பொங்காளியம்மன் கோவில் நிர்வாகிகள் சார்பாக நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது
ராக்கியாபாளையத்தில் உள்ள மந்தை பூமியை கால்நடை பராமரிப்பு இடமாகவும், பாவு நூல் துவைப்பதற்கு பாவடியாகவும், மாரியம்மன் கோவில் மற்றும் பொங்காளியம்மன் கோவில் பக்தர்கள் பொங்கல் வைப்பதற்கும், விழா காலங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், வண்டி வாகனங்கள் நிறுத்துவதற்கும் 150 ஆண்டுகளுக்கு மேலாக பொது இடமாக அந்த பூமி உள்ளது.
தென் பகுதியில் உள்ள சூர்யா நகர், அம்மன் நகர், கே.என்.எஸ்.நகர் போன்ற பகுதியில் உள்ள மக்கள் கோவிலுக்கு வருவதற்கும், கடைகளுக்கு செல்வதற்கும் பொது பாதையாகவும் அந்த இடத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
பூமி பூஜை
இந்த நிலையில் அந்த இடத்தில் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்ததால், மாற்று இடம் தேர்வு செய்யுமாறு ஊர் மக்கள் சார்பாக கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர், அவினாசி தாசில்தார், எம்.எல்.ஏ. ஆகியோருக்கும் பலமுறை மனு கொடுக்கப்பட்டது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அந்த இடத்தில் போலீஸ் நிலையம் அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டது.
ஆனால் கடந்த மாதம் 28-ந் தேதி பூமிபூஜை செய்து காவல்துறை பாதுகாப்புடன் அந்த இடத்தில் போலீஸ் நிலையம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் சார்பாக சம்பந்தப்பட்ட இடத்தில் போலீஸ் நிலையம் அமைக்க தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.
கட்டுமான பணி
ஐகோர்ட்டு விசாரித்து, திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் இரண்டு வாரங்களுக்குள் கோரிக்கையை அனுப்பிவைக்கவும், கலெக்டர் 8 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவு செய்யுமாறு அறிவுறுத்தி வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
எனவே கலெக்டரின் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை சம்பந்தப்பட்ட இடத்தில் கட்டிட கட்டுமான பணி நடைபெறாமல் நிறுத்திவைக்க கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
அதுபோல் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.
-
Related Tags :
Next Story