மருத்துவ சிகிச்சைக்கு இலவச பயணம் ஆட்டோ டிரைவருக்கு கலெக்டர் பாராட்டு
மருத்துவ சிகிச்சைக்கு செல்பவர்களை இலவசமாக ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவரை கலெக்டர் பாராட்டினார்.
தேனி:
தேனி சுப்பன்தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த ஒரு ஆண்டாக இவர் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளை தனது ஆட்டோவில் இலவசமாக ஏற்றிச் சென்று அவர்கள் சொல்லும் இடங்களில் இறக்கி விட்டு வருகிறார். அவர் தனது ஆட்டோவில் மருத்துவத்துக்கு இலவசம் என்ற அறிவிப்பை ஒட்டி வைத்துள்ளார். இவருடைய சேவைக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. இந்நிலையில், நேற்று பழனிசெட்டிபட்டியில் நடந்த தடுப்பூசி முகாமுக்கு சிலரை இலவசமாக தனது ஆட்டோவில் அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்தும் மையத்தில் இறக்கிவிட்டுக் கொண்டு இருந்தார்.
இந்த சமயத்தில் அந்த முகாமை ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் முரளிதரன் வந்தார். அவர் நுழைவு வாயிலில் நின்ற ஆட்டோவில் ஒட்டியுள்ள அறிவிப்பை பார்த்து டிரைவர் கார்த்திக்கிடம் விசாரித்தார். அப்போது கார்த்திக், கடந்த ஒரு ஆண்டாக மருத்துவ சிகிச்சைக்கு செல்பவர்களை இலவசமாக அழைத்து செல்வதாக கூறினார். இதையடுத்து அவருக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர் தனது காரில் இருந்த சால்வையை எடுத்துவரச் சொல்லி அதை அவருக்கு அணிவித்து அவருடைய சேவைக்கு பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்து கார்த்திக்கிடம் கேட்டபோது, "கடந்த ஆண்டு கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்ட போது, மருத்துவ சிகிச்சைக்கு இலவசமாக ஆட்டோ ஓட்ட முடிவு செய்தேன். இதனால் மன நிறைவு கிடைத்தது. தற்போது மாற்றுத்திறனாளிகளையும் இலவசமாக அழைத்துச் செல்கிறேன். கலெக்டர் பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இந்த சேவையை தொடர உத்வேகம் அளித்துள்ளது" என்றார்.
Related Tags :
Next Story