தேன்கனிக்கோட்டை அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட குட்டி யானை பரிதாப சாவு
தேன்கனிக்கோட்டை அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட குட்டி யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக செத்தது.
தேன்கனிக்கோட்டை:
குட்டி யானை
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பொட்டமுகிலாளம் கிராமத்தையொட்டி உள்ளது புல்லள்ளி காப்புக்காடு. இங்கு யானைகள், மான்கள், காட்டெருமைகள், கரடிகள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் உள்ளன. இவை அடிக்கடி உணவு தேடி அருகில் உள்ள கிராமத்திற்குள் புகுந்து விடுகின்றன.
இந்த நிலையில் காட்டு யானைகள் கூட்டமாக புல்லள்ளி வனப்பகுதியில் சுற்றி வந்தது. இந்த கூட்டத்தை சேர்ந்த 6 வயது ஆண் குட்டி யானைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. மேலும் அந்த குட்டி யானை உணவு சாப்பிட முடியாமலும் அவதிப்பட்டு வந்தது.
உணவு உண்ண மறுப்பு
நேற்று முன்தினம் திடீரென குட்டி யானை மயங்கி கீழே விழுந்தது. இதையடுத்து பிற யானைகள் குட்டி யானையை அங்கேயே விட்டு, விட்டு சென்றுவிட்டன. அப்போது வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்க்க சென்ற பொதுமக்கள், குட்டி யானை சுருண்டு விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அவர்கள் தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், மாவட்ட வன அலுவலர் பிரபு தலைமையில் வனச்சரகர் சுகுமார், கால்நடை டாக்டர் பிரகாஷ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், மருத்துவ குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் குட்டியானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து உணவும் வழங்கப்பட்டது. ஆனால் குட்டி யானை உணவு உண்ண மறுத்து வந்தது.
பரிதாப சாவு
இதனிடையே வனப்பகுதியில் மழை பெய்தது. இதனால் வனத்துறையினர் தற்காலிக கூடாரம் அமைத்து குட்டி யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த சிகிச்சை தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் நீடித்தது. ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் 12.30 மணிக்கு குட்டி யானை பரிதாபமாக செத்தது.
இதையடுத்து கால்நடை டாக்டர் பிரகாஷ் தலைமையில் குட்டி யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கேயே குழி தோண்டி அதன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
2 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், குட்டி யானை செத்தது வனத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Related Tags :
Next Story