பெண் குழந்தை மர்ம சாவு
விழுப்புரத்தில் பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்தாா்.
விழுப்புரம்,
விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஷமிலுதீன் (வயது 33), இவரது மனைவி நஸ்ரீன் (32). இவர்களுக்கு கடந்த 2017-ல் திருமணம் நடந்தது. முதல் பிரசவத்தின்போது நஸ்ரீன் இறந்தார். அவரது குழந்தையை மட்டும் டாக்டர்கள் காப்பாற்றினர். நஸ்ரீன் இறந்ததற்கு பிறகு அவரது குழந்தைக்கு நசீபா(2½) என்று பெயர் சூட்டி ஷமிலுதீனின் தங்கை வளர்த்தார். அதன் பிறகு 2019-ல் ஷமிலுதீன், அப்ஷானா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த ஓராண்டு காலமாக நசீபாவை ஷமிலுதீனும், அவரது 2-வது மனைவி அப்ஷானாவும் வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை குழந்தை நசீபா, வீட்டிலேயே இறந்து கிடந்தது. இதுகுறித்து ஷமிலுதீன் தங்கையின் கணவர் முகமதுஷாகீர், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், குழந்தை நசீபாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தை எப்படி இறந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story