பூ வியாபாரி வீட்டில் ரூ.7 லட்சம் நகை- பணம் கொள்ளை
கோவில்பட்டியில் பூ வியாபாரி வீட்டில் ரூ.7 லட்சம் நகை மற்றும் பணத்தை மர்மநபர் கொள்ளையடித்துச் சென்றார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் பூ வியாபாரி வீட்டில் புகுந்து ரூ.7 லட்சம் நகை மற்றும் பணத்தை மர்மநபர் கொள்ளையடித்துச் சென்றார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பூ வியாபாரி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோபால்செட்டி தெருவை சேர்ந்தவர் வெயிலுமுத்து (வயது 56), பூ வியாபாரி. இவர் தனது மனைவி பேச்சியம்மாள் (53), பேரன் செந்தில் வேலவன் (3) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். வீட்டின் மாடியில் மகன் சுதர்சன் (32) மற்றும் மருமகள் ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்தான். அங்கு தூங்கிக்கொண்டு இருந்த பேச்சியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை மர்மநபர் நைசாக கழற்றினான். இதனால் திடுக்கிட்டு கண் விழித்த பேச்சியம்மாள் கூச்சல் போட்டார். அவரது சத்தம் கேட்டதும் அருகில் படுத்திருந்த கணவர் வெயிலுமுத்து, மாடியில் படுத்திருந்த மகன் மற்றும் மருமகளும் எழுந்து வந்தனர்.
15 பவுன் நகைகள்
ஆனால், அதற்குள் அந்த மர்ம நபர், பேச்சியமாள் கழுத்தில் கிடந்த 13 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு, மாடிப்படி வழியாக தாவி குதித்து தப்பிச்சென்று விட்டான்.
பின்னர் வெயிலுமுத்து வீட்டுக்குள் வந்து பார்த்தபோது பேரன் செந்தில்வேலவன் கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் நகையை பறித்துச் சென்றது மட்டுமன்றி, பீரோவில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தையும் மர்மநபர் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும்.
போலீசார் விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்ததும் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிந்திருந்த மர்மநபரின் கைரேகையை ஆய்வு செய்தனர்.
வீட்டின் முன்பகுதி பூட்டப்பட்டு இருந்ததால் மாடி வழியாக இறங்கிய மர்மநபர் பீரோவில் இருந்த பணத்தை எடுத்துககொண்டு, பின்னர் செந்தில்வேலவன் மற்றும் பேச்சியம்மாள் கழுத்தில் இருந்த நகைகளை திருடிக்கொண்டு தப்பி ஓடி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
பரபரப்பு
இந்த துணிகர கொள்ளை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கோபால்செட்டி தெரு மிகவும் குறுகலான தெரு மட்டுமின்றி, அடுத்தடுத்து சிறு இடைவெளி கூட இல்லமால் வீடுகள் நிறைந்த பகுதியாகும். இங்கு நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story