வந்தவாசியில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை


வந்தவாசியில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 16 July 2021 10:30 PM IST (Updated: 16 July 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த காதல்ஜோடி, வந்தவாசியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

வந்தவாசி

பூங்காவில் பிணமாக கிடந்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி பூங்காவில் பொதுமக்கள் தினமும் காலை மற்றும் மாலையில் நடைபயிற்சி சென்று வருகின்றனர். வழக்கம்போல நேற்றுமாலை பொதுமக்கள் நடை பயிற்சி சென்றனர். அப்போது பூங்காவின் ஒரு பகுதியில் உள்ள மரத்தடியில் ஒரு இளம் பெண்ணும், வாலிபர் ஒருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், இறந்து கிடந்தவர்களின் உடல்களை பார்த்து விசாரணை நடத்தினர். 
காதல் ஜோடி

அப்போது இறந்து கிடந்தவர்களின் அருகில் விஷப்பாட்டில், செல்போன், ஆதார் அட்டை, ஏ.டி.எம். கார்டு ஆகியவை கிடந்தது. அந்த செல்போன்கள் மூலம் போலீசார் விசாரணை செய்ததில் இறந்து கிடந்தவர்கள் காதல் ஜோடி என்பது தெரியவந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் ராமாபுரம் அடுத்த காட்டுக்கூடலூரை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் பரத் (வயது 20). இவரும், ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் அக்‌ஷயா (19) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த காதல் ஜோடி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.
போலீஸ் விசாரணை

அதற்காக நேற்று திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகராட்சி பூங்காவுக்கு வந்துள்ளனர். அங்குவைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்களுடைய பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story