பள்ளிபாளையம் அருகே சானிடரி நாப்கின்கள் தயாரிக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு
பள்ளிபாளையம் அருகே சானிடரி நாப்கின்கள் தயாரிக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு
நாமக்கல்:
பள்ளிபாளையம் அருகே கொக்கராயன்பேட்டையில் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் சானிடரி நாப்கின்கள் தயாரிக்கும் பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சானிடரி நாப்கின் தயாரிப்பு
பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொக்கராயன்பேட்டையில் செம்பருத்தி மகளிர் சுய உதவிக்குழுவினர் சானிடரி நாப்கின்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குழுவை சேர்ந்த 12 பெண்கள் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் சானிடரி நாப்கின்கள் தயாரிப்பதற்கான உபகரணங்களை வாங்கி நாப்கின்களை தயாரித்து வருகின்றனர்.
இந்த குழுவினருக்கு தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் ரூ.3 லட்சம் வரை சுழல்நிதி கடன் வழங்கப்படுகிறது. தினந்தோறும் 3,600 சானிடரி நாப்கின்கள் இங்கு தயாரிக்கப்பட்டு வருகிறது. இவைகள் ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் மூலம் தமிழக அரசின் சுகாதார துறைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஒளிக்கதிர் எந்திரம்
கொரோனா ஊரடங்கால் பொருளாதார பாதிப்பினை சீர்செய்ய செம்பருத்தி மகளிர் சுயஉதவி குழுவினருக்கு தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் கொரோனா சிறப்பு நிவாரண நிதியாக ரூ.1.50 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. இதனிடையே நேற்று சானிடரி நாப்கின்கள் தயாரிக்கும் பணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது எந்திரத்தின் உதவியுடன் பஞ்சை மிருதுவாக்கி வடிவமைக்கும் பணி நடந்ததை அவர் பார்வையிட்டார். பின்னர் நான்ஓவன் துணிகொண்டு சுற்றப்பட்டு சானிடரி நாப்கினாக உருவாக்கப்பட்டு, ஒளிக்கதிர் எந்திரத்தின் மூலம் கிருமிநீக்கம் செய்து, சீலிடப்பட்டதை கலெக்டர் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அங்கிருந்த ஆவணங்களையும் அவர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, செம்பருத்தி மகளிர் சுய உதவிக்குழு தலைவர் சத்யபிரியா, பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரிஜா, கோவிந்தன் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story