சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 7 டி.எம்.சி.யை தாண்டியது


சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 7 டி.எம்.சி.யை தாண்டியது
x
தினத்தந்தி 16 July 2021 11:00 PM IST (Updated: 16 July 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 7 டி.எம்.சி.யை தாண்டியது.

ஊத்துக்கோட்டை,

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த மாதம் 16-ந்தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் பூண்டி ஏரி நீர்மட்டம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. வழக்கமாக பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்புவது வழக்கம்.

தற்போது இந்த 2 ஏரிகளிலும் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணா நீர் முழுவதும் பூண்டி ஏரியில் சேமிக்கப்படுகிறது.

7.022 டி.எம்.சி. தண்ணீர்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் உள்பட 5 ஏரிகளில் மொத்தம் 11.75 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். தற்போதைய நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் 7.022 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் ஏரிகளில் 4.80 டி.எம்.சி. தண்ணீர் மட்டும்தான் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பூண்டி ஏரியில் 840 மில்லியன் கனஅடியும், சோழவரம் ஏரியில் 573 மில்லியன் கனஅடியும், புழல் ஏரியில் 2,601 மில்லியன் கனஅடியும், கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரியில் 450 மில்லியன் கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 2,579 மில்லியன் கனஅடியும் தண்ணீர் இருப்பு உள்ளது.

Next Story