கிண்டல் செய்ததால் ஆத்திரம் கம்பியால் அடித்து சிறுவன் படுகொலை


கிண்டல் செய்ததால் ஆத்திரம் கம்பியால் அடித்து சிறுவன் படுகொலை
x
தினத்தந்தி 16 July 2021 11:07 PM IST (Updated: 16 July 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

கிண்டல் செய்ததால் ஆத்திரம் அடைந்து சிறுவனை கம்பியால் அடித்து கொலை செய்த மாமாவை போலீசார் கைது செய்தனர்.

ஊட்டி

கிண்டல் செய்ததால் ஆத்திரம் அடைந்து சிறுவனை கம்பியால் அடித்து கொலை செய்த மாமாவை போலீசார் கைது செய்தனர்.

6 வயது சிறுவன் 

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஜல்லிக்குழி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி ஷாலினி. இவர்களுக்கு ஜீவன் ஸ்ரீ (வயது 6) என்ற மகன் இருந்தான்.

 கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டு களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

இதனால் ஜீவன் தனது பாட்டி ஜானகி வீட்டில் வசித்து வந்தான். அவ்வப்போது சிறுவன் வீட்டுக்கு வெளியே விளையாடுவது வழக்கம். 

பரிதாப சாவு 

இந்த நிலையில் சிறுவன் ஜீவன் ஸ்ரீயை அவனுடைய மாமா விஜயகுமாா் (25) ஊட்டி தலைமை ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். கட்டிலில் இருந்து விழுந்து விட்டதால் காயம் அடைந்து இருப்பதாகவும் டாக்டரிடம் விஜய குமார் கூறினார். 

அந்த சிறுவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் அவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். ஆனால் சிறுவனின் உடலில் காயம் இருந்ததால் இது குறித்து டாக்டர்கள் ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 

மாமா கைது 

அதன் பேரில் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அந்த சிறுவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்ற விஜயகுமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர் முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்தார். 

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், விஜயகுமாரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது அந்த சிறுவனை மாமா விஜய குமார் கம்பியால் தலையில் அடித்தது தெரியவந்தது. 

இதையடுத்து இந்த வழக்கை கொலையாக மாற்றி விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர்.  கைதான விஜயகுமார் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:- 

கிண்டல் செய்ததால் ஆத்திரம் 

சிறுவன் ஜீவன் ஸ்ரீ வெளியே விளையாடும்போது அடிக்கடி மாமா விஜயகுமாரை கிண்டல் செய்து வந்துள்ளான். அத்துடன் விஜயகுமார் ஏதாவது தவறு செய்தால் அதை பாட்டியிடம் தெரிவித்து மாட்டியும் விட்டு உள்ளான்.

 அதுதவிர அவரை கிண்டல் செய்தால் அது தொடர்பாக லேசாக அடித்தாலும் பாட்டியிடம் சொல்லி திட்டு வாங்கி கொடுத்து உள்ளான். 

இந்த நிலையில் சம்பவத்தன்று விஜய குமாரை சிறுவன் கிண்டல் செய்து உள்ளான். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அங்கு கிடந்த கம்பியை எடுத்து சிறுவனின் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் அடித்து உள்ளார். 

இதில் படுகாயம் அடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளான் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story