குமரி மாவட்ட போலீசாருக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
கொரோனாவில் இருந்து தப்பிக்க குமரி மாவட்ட போலீசாருக்கு பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வழங்கினார்.
நாகர்கோவில்:
கொரோனாவில் இருந்து தப்பிக்க குமரி மாவட்ட போலீசாருக்கு பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வழங்கினார்.
பாதுகாப்பு உபகரணங்கள்
குமரி மாவட்ட போலீஸ் துறையினருக்கு கொரோனா காலத்தில் பயன்படுத்தப்பட வேண்டிய பாதுகாப்பு உபகரணங்களான முகக் கவசங்கள், கையுறைகள் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் மறவன் குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகர போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பங்கேற்று போலீசாருக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியபோது கூறியதாவது:-
கொரோனா என்ற பெரும் தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது மெல்ல மெல்ல அதிலிருந்து மீண்டு வருகிறோம். இன்னும் குறைந்தது ஒன்றரை ஆண்டுகள் இந்த கொரோனாவின் தாக்கம் இருக்கும் என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். எனவே போலீசார் அனைவரும் பாதுகாப்புடன் பணியாற்றிட வேண்டும்.
மூச்சு விடுவதில் சிரமம்
இந்த உபகரணங்களை சரியான முறையில் போலீசார் பயன்படுத்தி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். கொரோனாவில் இருந்து மீண்ட போலீசார் தங்களது உடல் நிலையை தொடர்ந்து கவனிக்க வேண்டும். ஒரு சிலர் கொரோனாவில் இருந்து மீண்ட பின்னரும் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும். எனவே உடல் நிலையில் போலீசார் அக்கறையுடன் செயல்பட வேண்டும். மேலும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குமரி மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் போலீசாருக்கு இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. தற்போது முதற்கட்டமாக நாகர்கோவில் மாநகர பகுதியில் பணியாற்றக் கூடிய போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசாருக்கு இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன. சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story