அருங்காட்சியகத்தினை கலெக்டர் ஆய்வு
அருங்காட்சியகத்தினை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கரூர்
கரூர் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட அருங்காட்சியகத்தினையும், தொல்லியல்துறையின் சார்பில் உள்ள அருங்காட்சியகத்தினையும் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, பண்டைய காலத்தில் அமைக்கப்பட்ட சிலைகளின் மாதிரிகள், கற்சிலைகள், பயன்படுத்தப்பட்ட தொன்மையான பொருட்கள், ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து, கரூர் நகராட்சியின் பழைய கட்டிடத்தில் பயன்பாடின்றி இருக்கும் அருங்காட்சியகத்தினை மாற்றி அமைப்பது குறித்து கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், தற்போது கரூர் மாவட்டத்தில் பழைய திண்டுக்கல் சாலை ஜவகர் பஜார் பகுதியில் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் மாவட்ட அருங்காட்சியகமும், மாரியம்மன்கோவில் அருகில் தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் இடம்பெற்றுள்ள அகழ்வைப்பகம் என 2 இடங்களில் அருங்காட்சியகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த 2 அருங்காட்சியகங்களும் தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. மேலும் வெவ்வேறு இடங்களில் அருங்காட்சியகங்கள் உள்ளதால் பொதுமக்கள் எளிதில் சென்று பார்க்க இயலாத நிலை உள்ளது. எனவே, இந்த அருங்காட்சியகங்களை ஒருங்கிணைத்து மேம்படுத்தி ஒரே இடத்தில் அமைப்பதற்கும், பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையிலும், வரலாற்றை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவும் அரசின் சொந்த கட்டிடத்தில் அருங்காட்சியகத்தை அமைப்பதற்கும் தேவையான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மதுரை உள்ளிட்ட சில இடங்களில் அகழ்வாராய்ச்சி பணி நடந்து வருகிறது. இதில் கரூரில் சில அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அடுத்த கட்டத்தில் கண்டிப்பாக கரூரில் அகழ்வாராய்ச்சி பணி மேற்கொள்ளப்படும் என்றார்.
அதனைத்தொடர்ந்து கரூர் காமராஜர் மார்க்கெட் பகுதியினை கலெக்டர் ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story