மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோவிலில் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெறுமா?


மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோவிலில் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெறுமா?
x
தினத்தந்தி 16 July 2021 11:54 PM IST (Updated: 16 July 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோவிலில் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெறுமா? என பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

லாலாபேட்டை
மகாலட்சுமி அம்மன் கோவில்
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே மேட்டு மகாதானபுரம் காவிரி கரையோரத்தில் பிரசித்தி பெற்ற மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெறும். 
இதையொட்டி நிகழ்ச்சி ஆடி 18-ந்தேதி தொடங்கும். அன்று காவிரி ஆற்றில் இருந்து புனிதநீரை எடுத்து யானை மீது வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு வருவார்கள். பின்னர் அம்மனுக்கு புனிதநீரை கொண்டு அபிஷேகம் நடைபெறும்.
தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி
பின்னர் மறுநாள் ஆடி 19-ந்தேதி தீர்த்தவாரிக்கு சென்று வந்த பிறகு கோவிலில் முன்பு உள்ள கொடிமரத்தில் விளக்கேற்றி வழிபாடு நடத்தப்படும். பின்னர் நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் வரிசையாக உட்கார வைத்து பூசாரி பக்தர்களின் தலையில் தேங்காய் உடைப்பார். இதனை காண கரூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதனால் அன்று மேட்டு மகாதானபுரமே விழாக்கோலம் பூண்டு இருக்கும். 
நிகழ்ச்சி நடைபெறுமா?
இதற்காக பக்தர்கள் ஆடி 1-ந்தேதியே தங்களது விரதத்தை தொடங்குவார்கள். இந்தநிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. 
இதனால் இந்தாண்டுவது நிகழ்ச்சி நடைபெறுமா? என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இன்று ஆடி 1-ந்தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story