திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாடல் ஒலித்ததில் மோதல்


திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாடல் ஒலித்ததில் மோதல்
x
தினத்தந்தி 17 July 2021 12:40 AM IST (Updated: 17 July 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

தா.பழூர் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாடல் ஒலித்ததில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அடிக்காமலை கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒலிபெருக்கி மூலம் பாடல் ஒலிபரப்பப்பட்டது. அப்போது அங்கிருந்தவர்களிடம், அடிக்காமலை காலனி தெருவை சேர்ந்த ராமலிங்கம்(வயது 50) என்பவர், சத்தம் அதிகமாக இருக்கிறது, சற்று குறைத்து வையுங்கள் என்று கூறியுள்ளார். 

இதில் தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது அதே பகுதியை சேர்ந்த வீரபாண்டியன், அவருடைய மகன்கள் இளங்கண்ணன்(20), இளங்கவி (21) ஆகியோர் ராமலிங்கத்தை தகாத வார்த்தைகளால் திட்டி, அருகில் கிடந்த கட்டையால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் ராமலிங்கம் காயமடைந்தார்.

மேலும் அதை தடுக்க வந்த தனது மனைவி அஞ்சுகத்தை தாக்கியதாகவும், கையில் இருந்த கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி ராமலிங்கம் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் வீரபாண்டியன் உள்ளிட்ட 3 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

இதே சம்பவத்தில் திருமண நிகழ்ச்சியில் மாற்று மத பாடலை ஒலிபரப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீரபாண்டியன் மற்றும் அவருடைய மகன் இளங்கண்ணனை ராமலிங்கத்தின் மகன்கள் அபினேஷ்(21), கட்டபொம்மன் என்ற ஆனந்த்(30), கோவிந்தன் மகன் வினோத்குமார்(21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாகவும், அரிவாளாலும், கட்டையாலும் தலையில் தாக்கியதாகவும், அதை தடுக்க வந்த இளங்கண்ணனின் மாமா தமிழ்மணியை தாக்கியதாகவும், அவர்களை தடுக்க உறவினர்கள் வந்தபோது கையில் வைத்திருந்த அரிவாள் மற்றும் கட்டையை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த வீரபாண்டியன் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து இளங்கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் அபினேஷ் உள்ளிட்ட 4 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story