ஏலாக்குறிச்சியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


ஏலாக்குறிச்சியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 July 2021 7:11 PM GMT (Updated: 16 July 2021 7:21 PM GMT)

ஏலாக்குறிச்சியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள காலனி தெருவை சேர்ந்த மக்களுக்கு, அப்பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளன. மேலும் அங்கு 5 குடும்பத்தினரும் தங்கி வருகின்றனர். அப்பகுதியில் ஆலயம், நிலங்களுக்கு இடையே உள்ள வண்டிப்பாதை வழியாக அவர்கள் சென்று வந்தனர்.

தற்போது அந்த ஆலய நிர்வாகத்தினர் அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கம்பி வேலி அமைப்பதற்கான வேலைகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கம்பிவேலி அமைத்து பாதையை அடைக்க உள்ளதாகவும், தங்களுக்கு பாதை வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து காலனி தெரு மக்கள் நேற்று இரவு ஏலாக்குறிச்சி மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமானூர் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இந்த சம்பவம் குறித்து ஆலய நிர்வாகத்திடம் கலந்து ஆலோசித்து சரியான முடிவு தெரிவிப்பதாக கூறியதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதையடுத்து போலீசார், ஆலய நிர்வாகத்திடம் கேட்டபோது, நாங்கள் எங்களுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பள்ளம், மேடுகளை சரி செய்து கொண்டிருந்தோம். இன்னும் வேலி அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்னும் அப்பகுதி மக்கள் அவ்வழியே சென்று கொண்டுதான் இருக்கின்றனர். நாங்கள் செல்லக்கூடாது என்று கூறவில்லை. 

இது குறித்து அப்பகுதி மக்கள் எங்களிடம் எதுவும் கேட்காமல் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர், என்று தெரிவித்தனர். சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. சாலை மறியல் தொடர்பாக பெண்கள் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story