பெரம்பலூரில் நிரந்தர மக்கள் நீதிமன்றம்


பெரம்பலூரில் நிரந்தர மக்கள் நீதிமன்றம்
x
தினத்தந்தி 17 July 2021 1:00 AM IST (Updated: 17 July 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் பயன்பாட்டு சேவைகள் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பெரம்பலூரில் நிரந்தர மக்கள் நீதிமன்றம் செயல்படுகிறது.

பெரம்பலூர்:

நிரந்தர மக்கள் நீதிமன்றம்
பெரம்பலூர் மாவட்டத்தில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்றத்துக்கு வரும் முன்பு எழுகிற தகராறுகளை தீர்ப்பதற்கு மக்கள் நீதிமன்றம் குறிப்பிட்ட இடைவெளியில் அமைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் பயன்பாட்டு சேவைகள் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாவட்ட அளவில் நிரந்தர மக்கள் நீதிமன்றம் பெரம்பலூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாற்றுமுறை சமரச தீர்வு மையத்தில் மாவட்ட நீதிபதி தலைமையில் ஏற்படுத்தப்பட்டு, அனைத்து வேலை நாட்களில் இயங்கி வருகிறது.
இதில் மாவட்ட நீதிபதியை தலைவராகவும், பொது பயன்பாட்டு சேவைகளில் அனுபவம் உள்ள 2 பேர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொது பயன்பாட்டு சேவைகள் தொடர்பான வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு, முந்தைய பிரச்சினைகளுக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தீர்வளிக்கப்படுகிறது. பொது பயன்பாட்டு சேவைகளாக சாலை அல்லது நீர்வழி பயணிகள் மற்றும் பொருட்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து சேவைகள், அஞ்சல் அல்லது தொலைபேசி சேவை, பொதுமக்களுக்கு மின்சாரம் அல்லது நீர்வழி வழங்கும் சேவை, பொது பாதுகாப்பு அல்லது சுகாதார அமைப்பு, மருத்துவமனை அல்லது மருந்தகத்தின் சேவை, காப்பீடு சேவைகள், கல்வி அல்லது கல்வி நிறுவனங்கள், வீட்டு வசதி ஆகியவை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் இல்லை
நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் முன் வழக்கமான நீதிமன்ற நடைமுறைகள் இன்றி, சாதாரண காகிதத்தில் வழக்குகளை தாக்கல் செய்யலாம். இதன் மூலம் வழக்குகளை விரைந்து முடிக்கலாம். வழக்கு தாக்கல் செய்ய நீதிமன்ற கட்டணம் செலுத்த தேவையில்லை. இதன் முடிவு உரிமையியல் நீதிமன்ற தீர்ப்புக்கு சமமானது. நிரந்தர மக்கள் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு தாக்கல் செய்ய முடியாது. இந்த உத்தரவு இறுதியானது.
கடுமையான நடைமுறைகள் இன்றி, ஏழை, எளிய மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கிறது. எனவே, நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை பெரம்பலூர் மாவட்ட மக்கள் அனைவரும் தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் (பொறுப்பு) கிரி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story