மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணி எப்போது தொடங்கும்?


மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணி எப்போது தொடங்கும்?
x
தினத்தந்தி 17 July 2021 1:59 AM IST (Updated: 17 July 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் கட்டுமான பணி எப்போது தொடங்கும்? என்பது தொடர்பாக நேற்று நடந்த நிர்வாகக்குழு கூட்டத்தில் தகவல் அளிக்கப்பட்டது.

விருதுநகர், 
மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் கட்டுமான பணி எப்போது தொடங்கும்? என்பது தொடர்பாக நேற்று நடந்த நிர்வாகக்குழு கூட்டத்தில் தகவல் அளிக்கப்பட்டது.
நிர்வாகக்குழு கூட்டம்
 மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் நிர்வாகக்குழு கூட்டம் அதன் தலைவர் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரி தலைவர் டாக்டர் விஸ்வா மோகன் கட்டோக் தலைமையில் காணொலி மூலம் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாகக்குழு செயலாளர் டாக்டர் ஹனுமந்த ராவ், உறுப்பினர்கள் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர், தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்பட 16 பேர் கலந்து கொண்டனர். இக்குழு உறுப்பினரான தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
 நிதி ஒதுக்கீடு 
 இந்த கூட்டத்தில் நடந்த விவாதம் குறித்து தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-
மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான 220 ஏக்கர் நிலம் மாநில அரசால் மத்திய அரசுக்கு வகை மாற்றம் செய்து தரப்பட்டு விட்டது. மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிக்கு ரூ.1,978 கோடி ெசலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
 இதில் ஜப்பான் நிறுவனமான ஜைக்கா நிறுவனம் ரூ.1,678 கோடி நிதி உதவி செய்கிறது. மீதமுள்ள ரூ.300 கோடி மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்படும். எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஜப்பான் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு அந்த நிறுவனம் மேலும் காலம் எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜப்பான் நிறுவனமான ஜைக்கா நிறுவனம் சார்பில் ஆஸ்பத்திரியின் வரைபடம் மற்றும் மதிப்பீடு தயாரிப்பு பணி முடிவடைந்த பின்பு 2023-ம் ஆண்டு் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணி தொடங்கக்கூடும் எனவும்,. அதே நேரத்தில் 2026-ம் ஆண்டுதான் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் கட்டுமான பணி முழுமையாக முடிவடைய வாய்ப்பு உள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
மாணிக்கம் தாகூர் எம்.பி. 
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசுகையில், “2015-ம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் 2019-ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யாத நிலையில் பிரதமர் மோடி, மதுரையில் அடிக்கல் நாட்டிச்சென்றார்.
 ஆனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் 2 ஆண்டுகளாக அடிக்கல் மட்டுமே நின்று கொண்டிருக்கிறது. இன்னும் கட்டுமான பணி தொடங்கப்படாத நிலையில் மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. எனவே கட்டுமான பணி தொடங்குவது குறித்து உறுதியான தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார். மத்திய அரசு இதுபற்றி முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 
50 மாணவர்கள் சேர்க்கை
 இதற்கு பதில் அளித்த மத்திய அரசின் கூடுதல் நிதித்துறை செயலாளர், மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் தற்போது முதலாம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாகவும், வரும் கல்வி ஆண்டில் 50 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என தெரிவித்தார். மேலும் இதற்காக 180 மருத்துவ பேராசிரியர்களும், 150 இதர பணியாளர்களும் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான ஆள்தேர்வு படிப்படியாக தொடங்கப்பட உள்ளது. 
இந்தநிலையில் முதலாண்டு மாணவர் சேர்க்கை முடிந்து மாணவர்களுக்கான கற்றல் பணியை எங்கு தொடங்குவது என்ற விவாதம் ஏற்பட்டது. இதில் மதுரை மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இடமில்லை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தேனி அல்லது சிவகங்கை மருத்துவக்கல்லூரியில் முதல் ஆண்டு மாணவர்கள் கற்றல் பணியை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
விருதுநகர் மருத்துவ கல்லூரி
விருதுநகர் மருத்துவ கல்லூரி கட்டிட கட்டுமான பணி முடிவடைந்து விட்ட நிலையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மருத்துவக்கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் விருதுநகர் மருத்துவக்கல்லூரியில் கற்றல் பணியை தொடங்க ஏற்பாடு செய்யலாம் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கருத்து தெரிவித்தார். ஆனால் அங்கு முழுமையாக உள்கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டியுள்ளதால் அடுத்த கல்வி ஆண்டில் வேண்டுமானால் அங்கு எய்ம்ஸ் ஆஸ்பத்திரி முதலாம் ஆண்டு மாணவர்கள் கற்றல் பணியை தொடங்க வாய்ப்பு உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 
இவ்வாறு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story