பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களின் திறனை மேம்படுத்த கர்நாடக அரசு-பெங்களூரு தொழில் வர்த்தக சபை இடையே ஒப்பந்தம் - அஸ்வத் நாராயண் பேட்டி


பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களின் திறனை மேம்படுத்த கர்நாடக அரசு-பெங்களூரு தொழில் வர்த்தக சபை இடையே ஒப்பந்தம் - அஸ்வத் நாராயண் பேட்டி
x
தினத்தந்தி 17 July 2021 2:00 AM IST (Updated: 17 July 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களின் திறனை மேம்படுத்த கர்நாடக அரசு மற்றும் பெங்களூரு வர்த்தக சபை இடையே ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.

பெங்களூரு:

  கர்நாடக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தொழில்முனைவோர்

  கர்நாடகத்தில் பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கவும், அவர்களை தொழில்முனைவோர்களாக மாற்றுவது தொடர்பாகவும், அவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கத்திலும் கர்நாடக அரசின் தொழில்நுட்ப கல்வித்துறை மற்றும் பெங்களூரு தொழில் வர்த்தசபை இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது.

  எனது முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. உயர்கல்வி, ஆராய்ச்சி, தொழில்முனைவு, வேலை வாய்ப்பு ஆகிய விஷயங்களில் மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களுக்கு என்று கூட்டாக ஒரு செல்போன் செயலி உருவாக்கப்படும். மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பது, அவர்களை தொழில் நிறுவனங்களுக்கு அழைத்து சென்று பார்வையிட வைப்பது, வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்கள் அளிப்பது போன்றவை ஏற்படுத்தப்படும். மேலும் மாணவர்களுக்கு கற்றல் நிர்வாக நடைமுறை மூலம் தரமான கல்வியை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விரைவாக வேலை

  பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிற்சி கூடங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்படும். தொழில் நிறுவனங்களில் உள்ள எந்திரகளுக்கு இணையான எந்திரங்களை கல்லூரிகளில் வைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் அவர்களுக்கு விரைவாக வேலை கிடைக்க வாய்ப்பு அதிகமாகும்.

  வேலை வாய்ப்புக்கு ஏற்ற வகையில் பாலிடெக்னிக் கல்லூரி பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலிடெக்னிக் பாடத்திட்டங்களை உருவாக்குவதில் தொழில் நிறுவனங்களுக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. தொழில் நிறுவனங்கள்-கல்வித்துறை இணைந்து செயல்பட்டால் இரு துறைகளும் வெற்றி பெற முடியும்.
  இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.

  இந்த பேட்டியின்போது உயர்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் நாயக், தொழில்நுட்ப கல்வித்துறை இயக்குனர் பிரதீப் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story