பலியான 94 குழந்தைகளுக்கு கண்ணீரால் அஞ்சலி செலுத்திய பெற்றோர்
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளின் 17-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பலியான குழந்தைகளுக்கு கண்ணீரால் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
கும்பகோணம்;
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளின் 17-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பலியான குழந்தைகளுக்கு கண்ணீரால் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
94 குழந்தைகள் கருகி பலி
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
கேட்பவர் அனைவரது நெஞ்சையும் கலங்கடிக்க செய்த இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கியது. தாங்கள் பெற்று வளர்த்த தங்களது குலக்கொழுந்துகள் தீக்கிரையாகி கரிக்கட்டையாகி கிடந்ததை பார்த்து பெற்றோர் கதறிய ஓலம் விண்ணை முட்டியது என்றே சொல்லலாம். இந்திய வரலாற்றில் கறை படிந்த அந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
17-ம் ஆண்டு நினைவு தினம்
அதன்படி 17-ம் ஆண்டு நினைவு தினம் கும்பகோணத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. தங்களது குழந்தைகளை இழந்த பெற்றோர் அவரவர் வீடுகளில் பலியான தங்களது குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து, குழந்தைகளுக்கு பிடித்த தின்பண்டங்களையும், புத்தாடைகளையும் வைத்து படையலிட்டனர்.
தீ விபத்து சம்பவம் நடந்த காசிராமன் தெருவில் உள்ள பள்ளி முன்பு இறந்த 94 குழந்தைகளின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட பேனர் முன்பு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
கண்ணீரால் அஞ்சலி
குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் வளையம் வைத்தும் கண்ணீரால் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து கும்பகோணம் பழைய பாலக்கரை பகுதியில் அரசால் அமைக்கப்பட்டுள்ள பலியான குழந்தைகளின் நினைவிடத்துக்கு சென்று மாலை அணிவித்தும், பூக்களைத் தூவியும் மவுன அஞ்சலி செலுத்தினர்.
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் குழந்தைகள் இறந்த பின்னர் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்கள் கூரை கட்டிடங்களில் இருந்து கான்கிரீட் கட்டிடங்களாக மாற்றப்பட்டது.
பெற்றோர் கோரிக்கை
எனவே பலியான குழந்தைகளின் நினைவாக ஜூலை 16-ந் தேதியை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும்., அன்றைய தினம் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை விட வேண்டும். இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த குழந்தைகள் தற்போது கல்லூரி படிப்பை நிறைவு செய்துள்ளதால் அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
காசிராமன் தெருவில் உள்ள தீ விபத்து நடந்த பள்ளிக்கூடத்துக்கு சென்ற தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் அங்கு வைக்கப்பட்டிருந்த பலியான குழந்தைகளின் உருவப்படங்களுக்கு முன்பு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது பெற்றோர்களின் கோரிக்கையை தமிழக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.
Related Tags :
Next Story