நெல்லையில் மனித உரிமை ஆணைய நீதிபதி 2-வது நாளாக விசாரணை


நெல்லையில் மனித உரிமை ஆணைய நீதிபதி 2-வது நாளாக விசாரணை
x
தினத்தந்தி 17 July 2021 2:08 AM IST (Updated: 17 July 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் மனித உரிமை ஆணைய நீதிபதி 2-வது நாளாக விசாரணை நடத்தினார்.

நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளை மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணை நடந்தி வருகிறார். இந்த வழக்குகளின் விசாரணை, நெல்லை அரசு சுற்றுலா மாளிகையில் நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையின்போது, தற்போதைய புதுச்சேரி கவர்னரும், தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தபோது பா.ஜ.க.வுக்கு எதிராக மாணவி சோபியா கோஷமிட்டபோது மனித உரிமை மீறல் நடந்ததாக அவருடைய தந்தை சாமி அளித்த புகார் மனு மீது விசாரணை நடத்தப்பட்டது. சாமி தரப்பில் வக்கீல்கள் ராமச்சந்திரன், தனசேகரன் ஆஜரானார்கள்.

இந்த வழக்கை ரத்து செய்ய மதுரை ஐகோர்ட்டில் போலீஸ் அதிகாரிகள் தாக்கல் செய்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்ட உத்தரவை வக்கீல்கள் நீதிபதி முன்னிலையில் தாக்கல் செய்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும், மாணவி சோபியா, அவரது தந்தையை அடுத்த விசாரணையின்போது குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

நேற்று 2-வது நாளாக நடைபெற்ற விசாரணையின்போது, செங்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய கணவர் மற்றும் மகன் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்து துன்புறுத்துகின்றனர் என்று கண்ணீர்மல்க கூறினார். இந்த வழக்கில் உரிய விசாரணை மேற்கொள்ள நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

நேற்று 51 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. பெரும்பாலான வழக்குகளில் போலீஸ் அதிகாரிகளே விசாரணைக்கு வந்திருந்தனர். இதனால் அரசு சுற்றுலா மாளிகையில் போலீசார் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த வழக்குகளின் அடுத்தகட்ட விசாரணை வருகிற செப்டம்பர் மாதம் 8-ந்தேதி நடைபெறுகிறது.

Next Story