மேகதாதுவில் புதிய அணை கட்டுவது உறுதி- எடியூரப்பா பேட்டி
மேகதாதுவில் புதிய அணை கட்டுவது 100 சதவீதம் உறுதி என்று டெல்லியில் எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு:
மேகதாது திட்டம்
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி செலவில் மேகதாதுவில் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை தயரித்துள்ள அரசு, அதற்கு ஒப்புதல் வழங்க கோரி மத்திய அரசின் ஜல்சக்தித்துறைக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த வரைவு அறிக்கை நிலுவையில் உள்ளது. இந்த திட்டததை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது.
தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி குழு டெல்லியில் நேற்று மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து, மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கோரி கடிதம் வழங்கியது.
இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று மதியம் பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு அவர் கர்நாடக பவனில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சாதகமான அம்சங்கள்
பிரதமரை இன்று (நேற்று) மாலை 7 மணிக்கு சந்தித்து பேசுகிறேன். அவரிடம் மாநில அரசின் நீர்ப்பாசன திட்டங்கள் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து பேச உள்ளேன். மேலும் மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங் உள்பட பல்வேறு மந்திரிகள் மற்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து பேச இருக்கிறேன். இந்த சந்திப்புகளை முடித்துவிட்டு நாளை (அதாவது இன்று) மாலை கர்நாடகம் திரும்புகிறேன்.
மேகதாதுவில் புதிய அணை கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதுகுறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதி தெரிவித்தேன். ஆனால் அந்த மாநிலம் மேகதாது திட்டத்தை எதிர்ப்பதில் பிடிவாதமாக உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட சட்டத்தில் சாதகமான அம்சங்கள் உள்ளன.
புதிய அணை கட்டுவது...
இந்த திட்டத்தை செயல்படுத்த நாங்கள் சக்திமீறி முயற்சி செய்கிறோம். அதனால் மேகதாதுவில் 100 சதவீதம் புதிய அணை கட்டுவது உறுதி. கர்நாடக மக்களுக்கு இந்த உறுதிமொழியை அளிக்கிறேன்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story