தென்மேற்கு பருவமழை பெய்வதால் கர்நாடகத்தில் விதைப்பு பணிகள் தீவிரம் - மந்திரி பி.சி.பட்டீல் பேட்டி


தென்மேற்கு பருவமழை பெய்வதால் கர்நாடகத்தில் விதைப்பு பணிகள் தீவிரம் - மந்திரி பி.சி.பட்டீல் பேட்டி
x
தினத்தந்தி 17 July 2021 2:24 AM IST (Updated: 17 July 2021 2:24 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், விதைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் கூறினார்.

பெங்களூரு:
 
சொட்டுநீர் பாசனம்

  கர்நாடக விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் பெங்களூரு விகாச சவுதாவில் நேற்று அனைத்து மாவட்ட விவசாயத்துறை அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், விதைப்பு பணிகள் குறித்து அவர் விவரங்களை கேட்டறிந்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

  நுண்ணிய நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசன வசதி அமைக்க 2 எக்டேர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 90 சதவீத மானியமும், 5 எக்டேர் விவசாயிகளுக்கு 45 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. 5 எக்டேருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசன வசதிக்கு மானியம் வழங்கப்படுவது இல்லை. விவசாயிகளே பயிர் சர்வே பணிகளை மேற்கொள்ள கடந்த 2020-ம் ஆண்டு செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முயற்சி வெற்றி பெற்றது.

பயிர் காப்பீட்டு திட்டம்

  அதே போல் இந்த ஆண்டும் செல்போன் செயலி மூலம் விவசாயிகளே தங்களின் பயிர்களை சர்வே செய்து அதுகுறித்த விவரங்களை பதிவேற்றம் செய்யலாம். 36 வகையான பயிர்களை பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேர்க்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதுவரை 3.71 லட்சம் விவசாயிகள் ரூ.35 கோடி கட்டணம் செலுத்தி பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

  தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. அதனால் விதைப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. விதைப்பு பணிகளுக்கு தேவையான விதைகளோ அல்லது உரமோ பற்றாக்குறை இல்லை. அவை போதுமான அளவிற்கு இருப்பு உள்ளது. விதைகள், உரங்களை சட்டவிரோதமாக பதுக்கி அவற்றின் விலையை செயற்கையாக உயர்த்துவது கூடாது. அவ்வாறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விதைகள் இருப்பு

  பருவமழைக்கு முன்பு 77 லட்சம் எக்டேர் நிலப்பரப்பில் விதைப்பு பணிகள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 44.18 லட்சம் எக்டேர் நிலத்தில் பயிர் செய்யப்பட்டுள்ளது. 6 லட்சம் குவிண்டால் விதைகள் தேவை இருந்தது. அதைவிட அதிகமாக 8 லட்சம் குவிண்டால் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

  இதுவரை 3.12 லட்சம் குவிண்டால் விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. 17.44 லட்சம் டன் உரம் தேவை உள்ளது. இதில் இதுவரை 13.41 லட்சம் டன் உரம் விவசாயிகளுக்கு விற்கப்பட்டுள்ளது. இன்னும் 24.96 லட்சம் டன் உரம் குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
  இவ்வாறு பி.சி.பட்டீல் கூறினார்.

Next Story