குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்


குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்
x
தினத்தந்தி 17 July 2021 3:21 AM IST (Updated: 17 July 2021 3:21 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவும். அங்குள்ள அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழவும், ரம்மியமான சீசனை அனுபவிக்கவும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இந்த நிலையில் ெகாரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டில் இருந்து குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவில்லை. பின்னர் சில நாட்கள் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதித்தாலும், மீண்டும் தொற்று பரவல் அதிகரித்ததால் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது.

குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் கடந்த மே மாதம் தொடங்கியது. தொடர்ந்து சாரல் மழை பெய்து அருவிகளில் தண்ணீர் விழுந்தது. பின்னர் மழை குறைந்து வெயில் அடித்தது.

இந்த நிலையில் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலையில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை தூவியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை பெய்தது. இதனால் குற்றாலத்தில் பகலில் குளுமையான சூழல் நிலவி ரம்மியமாக காட்சி அளித்தது.

நீர்வரத்து அதிகரித்ததால் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் பரவலாக விழுகிறது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதேபோன்று பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, குற்றாலம் அருவிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அங்கு போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. எனவே, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் குற்றாலத்தில் குளிக்க அனுமதி வழங்கப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story