சென்னையில் கன மழை சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல்
சென்னையில் இடைவிடாமல் கொட்டித்தீர்த்த கன மழை சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை,
சென்னையில் நேற்று காலையில் இருந்தே மந்தமான வானிலை காணப்பட்டது. மாலையில் கருமேகம் வானை திரையிட்டு மறைத்துக்கொண்டது. அடுத்தடுத்த சில மணி நேரங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. வேப்பேரி, எழும்பூர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், பெரம்பூர், கோயம்பேடு, சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம், தியாகராயநகர், விருகம்பாக்கம், அசோக்நகர், வடபழனி, பாரிமுனை, சிந்தாதிரிப்பேட்டை, ஆலந்தூர், பல்லாவரம் என சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியது. ஈ.வெ.ரா. சாலையில் மழை நீர் முட்டளவுக்கு குளம்போல் தேங்கியது. அதில் தத்தளித்தப்படி வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. ஈ.வெ.ரா. சாலை, காந்தி-இர்வின் சாலை, அண்ணா சாலை உள்பட நகரின் பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் பிரதான சாலைகளில் இயக்க முடியாமல் உரிமையாளர்கள் தள்ளிக்கொண்டு சென்றனர். சில வாகனங்கள் பழுதாகி நின்றன. மழை நீர் தேங்கியதால் சில சாலைகளில் தடுப்புகளை அமைத்து மாற்றுப்பாதையில் வாகனங்களை போக்குவரத்து போலீசார் திருப்பிவிட்டனர். கடந்த சில நாட்களாக மழை பெய்தாலும், நேற்றைய மழை சென்னைவாசிகளை பரிதவிப்புக்கு உள்ளாக்கியது.
Related Tags :
Next Story