வாடிக்கையாளர்கள் போல் நடித்து கவரிங் நகைகளை மாற்றி வைத்து நகைக்கடையில் நூதன திருட்டு தாய்-மகள் கைது
நகைக்கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து கவரிங் நகைகளை மாற்றி வைத்து அதற்கு பதிலாக தங்க நகைகளை நூதன முறையில் திருடிச்சென்ற தாய்-மகள் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பூர்,
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் காலூராம் (வயது 63). இவர், அதே பகுதியில் சொந்தமாக நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சில தினங்களுக்கு முன்பு, நகை வாங்குவதுபோல் 2 பெண்கள் வந்தனர்.
கடையில் உள்ள பல வகையான நகைகளை பார்த்த அவர்கள், பின்னர் நகை வேண்டாம் என கூறிவிட்டு சென்றுவிட்டனர். அதன்பிறகு அந்த நகைகளை சோதனை செய்தபோது, அதில் ஒரு சங்கிலி, கம்மல், மோதிரங்கள் ஆகியவை கவரிங் என்பதை அறிந்து காலூராம் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர்தான் அந்த பெண்கள் இருவரும், வாடிக்கையாளர்கள்போல் நகைக்கடைக்கு வந்து நகை வாங்குவதுபோல் நடித்து, கவரிங் நகைகளை மாற்றி வைத்து விட்டு அதற்கு பதிலாக தங்க நகைகளை நூதனமுறையில் திருடிச்சென்றிருப்பதை அறிந்தார்.
இது குறித்து கொருக்குப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்து விசாரணை நடத்தினர். வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சிவபிரசாத் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, நகைக்கடை மற்றும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் நூதன திருட்டில் ஈடுபட்ட பெண்கள் இருவரும் ஆட்டோவில் ஏறிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதைவைத்து நடத்திய விசாரணையில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள கீழ்மாதிரை கிராமத்தை சேர்ந்த சுமதி (55) மற்றும் அவருடைய மகள் பிரியதர்ஷினி (26) ஆகியோர்தான் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து தாய்-மகள் இருவரையும் கைது செய்த போலீசார், 2 பேரிடம் இருந்தும் 4 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில இதேபோல் நகைக்கடைகளில் கைவரிசை காட்டி இருப்பதும் தெரிந்தது.
தனிப்படை போலீசார், கைதான தாய்-மகள் இருவரையும் கொருக்குப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story