வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்குமேல் மாடுகள் விற்பனை


வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்குமேல் மாடுகள் விற்பனை
x
தினத்தந்தி 17 July 2021 6:51 PM IST (Updated: 17 July 2021 6:51 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடியில் தடையை மீறி வியாபாரிகள் நடத்திய வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்குமேல் மாடுகள் விற்பனையானதாக, வியாபாரிகள் கூறினர்.

வாணியம்பாடி

வாணியம்பாடியில் தடையை மீறி வியாபாரிகள் நடத்திய வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்குமேல் மாடுகள் விற்பனையானதாக, வியாபாரிகள் கூறினர்.
அதிகாலை முதலே கொண்டு வந்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் சனிக்கிழமை தோறும் வார மாட்டுச்சந்தை நடப்பது வழக்கம். 

சமீப காலமாக கொரோனா தொற்று பரவியதால் வார மாட்டுச்சந்தை நடக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் வாணியம்பாடி பகுதியில் இஸ்லாமியர்கள் மாடுகளை அதிகளவில் விலைக்கு வாங்கி குர்பானி கொடுப்பது வழக்கம். 

இந்தநிலையில் நேற்று வியாபாரிகள் பெரியபேட்டை பகுதியில் உள்ள பாலாற்றுப் படுகையில் அரசு தடை உத்தரவை மீறி அமைத்த தற்காலிக வார மாட்டுச்சந்தையில் இஸ்லாமியர்கள் ஆர்வத்துடன் வந்து மாடுகளை வாங்கி சென்றனர். 

அதில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர மாநிலம் குப்பம், வீரணமலை, ராமகுப்பம் ஆகிய பகுதிகளில் இருந்தும் 1500-க்கும் மேற்பட்ட மாடுகளை விவசாயிகளும், வியாபாரிகளும் அதிகாலை முதலே சரக்கு வேன், லாரிகளில் கொண்டு வந்து இறக்கி விற்பனை செய்தனர். 

ஒரு மாட்டின் விலை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்று ஒரேநாளில் ரூ.1 கோடிக்குமேல் மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கோரிக்கை

பக்ரீத் பண்டிகையையொட்டி மேலும் 5 நாட்கள் தொடர்ந்து இதே பகுதியில் மாடுகளை விற்பனை செய்ய உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

அதற்காக, மாடு வியாபாரிகளுக்கு உரிய இடத்தை ஒதுக்கி கொரோனா தொற்று பரவாமல் தடுக்க வாணியம்பாடி நகராட்சி, வருவாய், காவல், சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story