திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கு சென்று கொரோனா தடுப்பூசி


திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கு சென்று கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 17 July 2021 9:43 PM IST (Updated: 17 July 2021 9:43 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கே சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. இதில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதேநேரம் சிறப்பு முகாமுக்கு வரமுடியாத மாற்றுத்திறனாளிகள், தடுப்பூசி செலுத்தி கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கே சென்று தடுப்பூசி போடும்படி, கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார். 
அதன்படி, மாவட்டத்தில் முதல்முறையாக திண்டுக்கல் மாநகராட்சியில் மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கு சென்று தடுப்பூசி போடும் பணி நேற்று நடந்தது. இதையொட்டி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், டாக்டர், செவிலியர்களை கொண்ட குழுவினர் 48 வார்டுகளிலும் வீடு, வீடாக சென்று மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர். நேற்றைய தினம் திண்டுக்கல் மாநகராட்சியில் 200-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது ஒருசிலர் தடுப்பூசி செலுத்தி கொண்டால் காய்ச்சல் வரும் என்று கூறி கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள மறுத்துவிட்டனர். 
இதற்கிடையே மக்கான்தெரு, அசோக்நகர், ஆர்.எம்.காலனி பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடும் பணியை மாநகர நலஅலுவலர் லட்சியவர்ணா ஆய்வு செய்தார்.

Next Story