குடகனாறு தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுக்கோரி போராட்டம்; விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம்


குடகனாறு தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுக்கோரி போராட்டம்; விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 17 July 2021 9:48 PM IST (Updated: 17 July 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

வல்லுனர் குழு அறிக்கையை வெளியிடவும், குடகனாறு தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரியும் போராட்டம் நடத்துவது என்று திண்டுக்கல்லில் நடந்த விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திண்டுக்கல்:
வல்லுனர் குழு அறிக்கையை வெளியிடவும், குடகனாறு தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரியும் போராட்டம் நடத்துவது என்று திண்டுக்கல்லில் நடந்த விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விவசாய சங்க கூட்டம் 
திண்டுக்கல் மாவட்ட விவசாய சங்கத்தின் ஆலோசனை கூட்டம், திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் நிக்கோலஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெள்ளைச்சாமி, செயல் தலைவர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குடகனாறு பாசன விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் சுந்தரராஜ், சின்னப்பன், எட்வின்ராஜா, அந்தோணி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் சங்கத்தின் மாநாடு, விவசாயிகளின் இன்றைய நிலை தொடர்பாக விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து விவசாயிகள் செல்ல வேண்டும். மாவட்டம் முழுவதும் 84 ஆயிரம் பாசன கிணறுகள் உள்ளன. வறட்சியால் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் கோழி வளர்ப்பு போன்ற மாற்று தொழிலுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே, கிணறுகளை சீரமைத்து விவசாயத்தை தொடர்வதற்கு மானியமாக தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.
குடகனாறு பிரச்சினைக்கு போராட்டம்
அதேபோல் குடகனாறு தண்ணீர் பங்கீடு பிரச்சினை தொடர்பான வல்லுனர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும். மேலும் பருவமழை தீவிரம் அடையும் முன்பு குடகனாறு தண்ணீர் பங்கீடு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அதற்காக விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்த வேண்டும். மேலும் விவசாய பணிகளில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை ஈடுபடுத்த வேண்டும்.
வறட்சியால் கடனில் தத்தளிக்கும் விவசாயிகள் விவசாயத்தை தொடர்ந்து மேற்கொள்ள வசதியாக கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விவசாயிகளுக்கும் தேவைக்கு ஏற்ப கடன் வழங்க வேண்டும். முத்தழகுபட்டியில் விளைபயிர்களை நாசம் செய்யும் ராட்சத ஆப்பிரிக்க நத்தைகளை ஒழிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் ஏற்படும் வறட்சியை நிரந்தரமாக போக்குவதற்கு குடகனாறு, காவிரி, வைகை ஆறுகளை இணைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story