ஆடி மாத பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆடி மாத பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 17 July 2021 9:59 PM IST (Updated: 17 July 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

ஆடி மாத பிறப்பையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முருகபவனம்:
ஆடி மாத பிறப்பையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
ஆடி மாத பிறப்பு
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பார்கள். இதையொட்டி ஆடி மாதத்தின் முதல் நாளில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி மாதத்தின் முதல் நாளையொட்டி நேற்று அம்மனுக்கு பால், பழம், சந்தனம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. 
இதேபோல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில், மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், ஆஞ்சநேயர் கோவில், மணிக்கூண்டு வெள்ளை விநாயகர் கோவில், நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆடி மாத பிறப்பையொட்டி சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 
சிறப்பு பூஜை
நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
இதேபோல் பகவதி அம்மன், காளியம்மன் கோவில், கோவில்பட்டி கைலாசநாதர், திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி ஆகிய கோவில்களிலும் ஆடி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

Next Story