தியாகதுருகம் வாரச்சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம்


தியாகதுருகம் வாரச்சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 17 July 2021 10:08 PM IST (Updated: 17 July 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் வாரச்சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்

கண்டாச்சிமங்கலம்

வாரச்சந்தை

தியாகதுருகத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் வாரசந்தை நடைபெறும். இங்கு விவசாயிகள் ஆடு, மாடு மற்றும் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். ஆடு, மாடுகளை உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்வார்கள். இதனால் சந்தை பரபரப்புடன் காணப்படும்.
ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக வாரச்சந்தை நடைபெறவில்லை. 

வியாபாரிகள் ஏமாற்றம்

இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வுகள் காரணமாக நேற்று வாரச்சந்தை கூடியது. அப்போது தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 200- க்கும் மேற்பட்ட ஆடுகளை மட்டுமே விற்பனைக்காக கொண்டு வந்தனர். 
வழக்கமாக பண்டிகை காலங்களில் வாரச் சந்தைக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் நேற்று குறைந்த அளவிலான ஆடுகள் விற்பனைக்கு வந்ததால் உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதியில் இருந்து வந்த வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். 

2 மணி நேரத்தில்

இது குறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது, வருகின்ற 21-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் அதிக அளவிலான ஆடுகள் சந்தைக்கு விற்பனைக்காக வரும் என்ற எதிர்பார்ப்புடன் வந்தோம். ஆனால்      மிகவும் குறைந்த எண்ணிக்கையில் ஆடுகளை விவசாயிகள் கொண்டுவந்தனர். ஒரு ஆடு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. ஆட்டுக்குட்டி ஒன்று குறைந்த பட்சம் ரூ.2 ஆயிரத்து 500 முதல் அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக ஒரு ஆடு மட்டும் ரூ.24 ஆயிரத்திற்கு விலைபோனது. மேலும் சந்தைக்கு வந்த ஆடுகள் அனைத்தும் 2 மணி நேரத்தில் விற்பனை ஆகிவிட்டது என்றார்.

Next Story