தர்மத்துப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா படங்களை வைப்பதில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் இடையே மோதல்
கன்னிவாடி அருகே தர்மத்துப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா படங்களை வைப்பதில் தி.மு.க., அ.தி.மு.க.வினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
கன்னிவாடி:
கன்னிவாடி அருகே தர்மத்துப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா படங்களை வைப்பதில் தி.மு.க., அ.தி.மு.க.வினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
கட்சியினர் மோதல்
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ளது, தர்மத்துபட்டி ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கடந்த வாரம் தி.மு.க.வை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் சிலர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படங்களை சுவரில் மாட்டினர்.
இதை பார்த்த அ.தி.மு.க. வார்டு உறுப்பினர்கள், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா படத்தையும் ஊராட்சி அலுவலகத்தில் வைக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் மருதமுத்துவை வலியுறுத்தினர். இதையடுத்து அங்கு ஜெயலலிதா படமும் வைக்கப்பட்டது.
இந்தநிலையில் ஜெயலலிதா படத்தை எடுக்குமாறு, தி.மு.க. உறுப்பினர்கள் நேற்று முன்தினம் ஊராட்சி தலைவரிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது அங்கு வந்த அ.தி.மு.க. வார்டு உறுப்பினர்கள், கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் படங்களை எடுத்தால், ஜெயலலிதா படத்தை எடுத்துவிடுவதாக கூறினர். இதனால் தி.மு.க., அ.தி.மு.க.வினருக்கு இடையே மோதல் உருவானது.
பேச்சுவார்த்தை
அப்போது பேசிய ஊராட்சி மன்ற தலைவர் மருதமுத்து, அதிகாரிகளை வரவழைத்து அவர்கள் என்ன செய்ய சொல்கிறார்களோ அதன்படி செய்யலாம் என்று கூறினார். இதனையடுத்து ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சோமசுந்தரம், ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் வேதா, கன்னிவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராசு ஆகியோருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அங்கு வந்த அதிகாரிகள், இரு கட்சியினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஊராட்சி அலுவலகத்தில் இருந்த ஜெயலலிதா படத்தை அகற்ற கூறியதுடன், கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் படத்தை வைத்துக்கொள்ளலாம் என்றனர்.
இதையடுத்து இருகட்சியினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க ஊராட்சி மன்ற அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் தர்மத்துப்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story