பொம்மிடி அருகே தம்பதி கொலை வழக்கில் கைதான கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
பொம்மிடி அருகே தம்பதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கோர்ட்டில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பொம்மிடி:
பொம்மிடி அருகே தம்பதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கோர்ட்டில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தம்பதி கொலை
பொம்மிடி அருகே உள்ள பில்பருத்தி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 80), விவசாயி. இவருடைய மனைவி சுலோசனா (75), ஓய்வுபெற்ற ஆசிரியை. இவர்கள் 2 பேரும் கடந்த 12-ந்தேதி இரவு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலை குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளிகளை கைது செய்ய 5 தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த ஹரிஷ் (20), முகேஷ் (19), பிரகாஷ்ராஜ் (19), அ.தி.மு.க. பிரமுகர் வேலவன் (24), சந்துரு (22), எழிலரசன் (26) ஆகிய 6 பேர் வயதான தம்பதியை கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து ஹரிஷ், முகேஷ், பிரகாஷ்ராஜ் ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து தாலிக்கொடிகள், கம்மல், 3 செல்போன்கள், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
3 பேருக்கு வலைவீச்சு
கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தனிப்படை போலீசார் 2-வது நாதளாக நடத்திய விசாரணையில், முகேஷ் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டும், ஹரிஷ் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் ஆர்த்தோ படித்து வந்ததும் தெரிந்தது. மேலும் ஊரடங்கு காரணமாக தற்போது கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து தம்பதியை கொலை செய்து நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேரையும் நேற்று தனிப்படை போலீசார் பாப்பிரெட்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி அரூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அ.தி.மு.க. பிரமுகர் வேலவன், சந்துரு, எழிலரசன் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story